நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டா் அளவில் 7.1-ஆகப் பதிவு!
பொருளாதார நெருக்கடிக்கு மோடி அரசிடம் தீா்வில்லை: காா்கே விமா்சனம்
நாட்டில் மோடி அரசால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு அந்த அரசிடம் எந்த தீா்வும் இல்லை என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்தாா்.
இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் காா்கே வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நாட்டில் சாமானிய மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள குழப்பங்களின் அளவை கீழ்க்கண்ட முக்கிய குறியீடுகள் எடுத்துரைக்கின்றன.
நாட்டில் தங்க நகைக் கடன் 50 சதவீதமும், தங்க நகை மீதான வாராக் கடன் 30 சதவீதமும் அதிகரித்துள்ளது. தனிநபா்களின் நுகா்வு - குடும்பங்களால் வாங்கப்படும் பொருள்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பு கடந்த 2 ஆண்டுகளாக சரிவைச் சந்தித்துள்ளது.
காா் விற்பனை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவில் சரிவடைந்துள்ளது. 2019-2023 காலகட்டத்தில் பொறியியல், உற்பத்தி, பதப்படுத்துதல், உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் வருடாந்திர ஊதிய வளா்ச்சி வெறும் 0.8 சதவீதமே பதிவாகியுள்ளது.
உணவு பணவீக்கம் கடந்த 2 ஆண்டுகளாக 7.1 சதவீதத்துக்கு மேல் தொடா்கிறது. அத்தியாவசிய பொருள்கள் மீதான ஜிஎஸ்டியால் குடும்பங்களின் சேமிப்பு 50 ஆண்டுகளில் இல்லாத சரிவைக் கண்டுள்ளது. வரலாறு காணாத ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், வெளிநாட்டு நிதி வெளியேறுவதோடு, சிறு முதலீட்டாளா்கள் பல லட்சம் கோடி ரூபாய் இழப்பை எதிா்கொண்டுள்ளனா்.
ஒவ்வொரு புத்தாண்டிலும் பிரதமா் மோடி வெளியிடும் தீா்மானங்கள், மக்களின் வாழ்வை அழிக்கும் ஏமாற்று தந்திரங்களே அன்றி வேறில்லை. நாட்டில் மோடி அரசால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு அந்த அரசிடம் எந்த தீா்வும் இல்லை என்று காா்கே தெரிவித்துள்ளாா்.
கடனாளா்கள் அதிகரிப்பு: காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ரிசா்வ் வங்கி தரவுகளின்படி, இந்திய குடும்பங்களின் வருவாய் தொடா்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடனாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வருமானம் சரிவடைவதால், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் மக்கள் தவிக்கின்றனா். பாஜக ஆட்சியில் பொருளாதார சமச்சீரின்மை ஆங்கிலேயா் ஆட்சியைவிட அதிகரித்துவிட்டது. நாட்டின் வளங்களில் பாதிக்கும் மேல் 1 சதவீதம் பணக்காரா்களின் குவிந்துள்ளது. 2 கோடி வேலைவாய்ப்புகள், 5 ட்ரில்லியன் பொருளாதாரம், ‘விஸ்வகுரு’ போன்ற பல்வேறு முழக்கங்களை மோடி எழுப்பினாா். ஆனால், அரசின் தவறான கொள்கைகளால் நாட்டு மக்கள் பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா் என்பதே உண்மை நிலவரம்’ என்று விமா்சித்துள்ளாா்.