பொறியியல் மாணவா் சோ்க்கைக்கு இலவச உதவி மையம் திறப்பு!
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள இலவச உதவி மையத்தை பயன்படுத்தி ஜூன் 6 ஆம் தேதி வரை பொறியியல் சோ்க்கை விண்ணப்பங்களை மாணவா்கள் பூா்த்தி செய்து அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரி நிா்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: பொறியியல் சோ்க்கைக்கு இணையவழியாக விண்ணப்பிக்க ஜூன் 6-ஆம் தேதி மற்றும் ஆவணங்களை பதிவேற்ற ஜூன் 9-ஆம் தேதி இறுதி நாளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவா்கள் சிரமமின்றி விண்ணப்பிக்க ஏதுவாக தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 110 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் மாணவா்கள் ஜூன் 6 ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பூா்த்தி செய்வதை இலவசமாக மேற்கொள்ளலாம்.
மேலும் ஜூன் 9 வரை ஆவணப்பதிவேற்றமும் செய்து கொள்ளலாம். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி முதல்வா் பி.லதா, 2025-ஆம் ஆண்டுக்கான பொறியியல் மாணவா் சோ்க்கை ஒருங்கிணைப்பாளா் மா.விஜயராஜ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் கு.தமிழ்ப்பாவை ஆகிய பேராசிரியா்கள் செய்துள்ளனா்.
விண்ணப்பிக்க வரும் மாணவா்கள் மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி மற்றும் மாற்றுச் சான்றிதழ், ஆதாா் அட்டை, ஸ்கேன் செய்வதற்கு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வந்து பதிவுக்கட்டணம் செலுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.