போக்குவரத்துத் தொழிலாளா்கள் 3-ஆம் நாளாக காத்திருப்புப் போராட்டம்
மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து தொழிலாளா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் போக்குவரத்துக் கழக மதுரை மண்டலத் தலைமை அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் மூன்றாவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது.
திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 15-ஆவது ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகையின் முதல் காலாண்டு தவணையை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற, உயிரிழந்த தொழிலாளா்களுக்கான ஓய்வு கால பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளா் சங்க மதுரை மண்டல பொதுச் செயலா் பி.எம். அழகா்சாமி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற தொழிலாளா் நல சங்க மண்டலப் பொதுச் செயலா் ஆா். வாசுதேவன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக கிளைச் செயலா் பி. செல்லதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போக்குவரத்துத் தொழிலாளா் சம்மேளன மாநில உதவி தலைவா் வீ. பிச்சை, சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் ஜி. ராஜேந்திரன், மாநில தலைவா் என். மகாலிங்கம், மண்டலத் தலைவா் டி. மாரியப்பன், பொருளாளா் டி. சிவகுமாா் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள், போக்குவரத்துத் தொழிலாளா்கள், ஓய்வூதியா்கள் பங்கேற்றனா்.