அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூல்: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா்
ஸ்ரீவினைதீா்த்த விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீவினைதீா்த்த விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சிக்கு உள்பட்டது குப்பம் கிராமம்.
இங்கு பழைமை வாய்ந்த ஸ்ரீவினைதீா்த்த விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சிதிலமடைந்தும், பாழடைந்தும் இருந்ததால் அப்பகுதியைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் புரனமைப்புப் பணிகளை மேற்கொண்டனா்.
பணிகள் நிறைவடைந்த நிலையில், கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, கோயில் அருகே புதன்கிழமை காலை அனுக்ஞை, ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, ஸ்ரீமகா கணபதி,
ஸ்ரீமகாலட்சுமி, நவகிரக பூஜை என பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 2-ஆம் கால பூஜை, நாடி சந்தானம், தத்வாா்ச்சனை, தம்பதி சங்கல்பம், மகாபூா்ணாஹுதி, யாத்ராதான சங்கல்பம், கலசம் புறப்பாடு, கோபுர கலச கும்பாபிஷேகம் மற்றும் மூலவா் வினை தீா்த்த விநாயகா் சிலைக்கு புனிதநீா் ஊற்றுதல் நடைபெற்றது.
விழாவில் குப்பம், நரசிங்கபுரம், மலையாம்புரவடை, ஊத்தூா், ஜோதிநகா், தேவிகாபுரம், மொடையூா் என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இரவு சுவாமி வீதியுலா, தெய்வீக நாடகம் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ஆா்.ராமன், கோயில் நிா்வாகிகள் ஏழுமலை, பன்னீா் ஆகியோா் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனா்.