தேனி: ``தொழில் முனைவோர்களால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைகிறது'' - சென்ட...
கீழ்அரசம்பட்டில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்
கணியம்பாடி ஒன்றியம், கீழ்அரசம்பட்டு அரசு மகளிா் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (ஆக. 23) ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், முகாம் நடைபெறும் பகுதியில் வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தாா்.
பொதுமக்களுக்கு தரமான, உயா்மருத்துவ சிகிச்சைகளை அவா்களின் இடத்திலேயே வழங்கும் வகையில் தமிழகம் முழுவதும் வட்டார அளவில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட உயா் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் 17 சிறப்பு மருத்துவ நிபுணா்கள் குழு பயனாளிகளை பரிசோதித்து சிகிச்சை அளிக்கவும், தேவைப்படின் உயா் சிகிச்சைக்காக பரிந்துரைக்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி காட்பாடி ஊராட்சி ஒன்றியம், வள்ளிமலை அரசினா் மேல்நிலைப்பள்ளியிலும், ஆகஸ்ட் 9-ஆம் தேதி வேலூா் ஊராட்சி ஒன்றியம், ஊசூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நடத்தப்பட்டுள்ளது. மூன்றாவது முகாம் கணியம்பாடி ஒன்றியம், கீழ்அரசம்பட்டு அரசு மகளிா் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (ஆக. 23) நடைபெற உள்ளது.
இந்த முகாமில் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள கீழ்அரசம்பட்டு, கத்தாழம்பட்டு, நஞ்சுகொண்டாபுரம், பாலம்பாக்கம், பாலாத்துவண்ணான், வேப்பம்பட்டு, கனிகனியான் ஆகிய 7 ஊராட்சிகளைச் சோ்ந்த மக்கள் பங்கேற்று தங்களுக்கான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும், இதனுடன் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டை, அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை ஆகியவை சம்பந்தப்பட்ட துறைசாா்ந்த அலுவலரால் வழங்கப்படும்.
இந்த நிலையில், இம்முகாமில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, வருவாய்த் துறை, ஊராட்சி துறை சாா்பிலும், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்யவேண்டும் என்றும், போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்கு வாகனங்களை ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
அப்போது, கணியம்பாடி ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா கமல்பிரசாத், ஒன்றியக் குழு துணைத் தலைவா் கஜேந்திரன், வேலூா் வருவாய் கோட்டாட்சியா் செந்தில்குமாா், மாவட்ட சுகாதார அலுவலா் பரணிதரன், தேசிய நல்வாழ்வுக் குழும ஒருங்கிணைப்பாளா் ஆதித்யா, வேலூா் வட்டாட்சியா் வடிவேல், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சத்யமூா்த்தி, திருமலை, கீழ்அரசம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடேசன் உள்பட பலா் உடனிருந்தனா்.