அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஆர்ஜென்டீனாவும் விலகல்!
போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வுடன் கூடிய ஓய்வூதியம்
போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வுடன் கூடிய ஓய்வூதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 90,000-க்கும் மேற்பட்ட ஓய்வூதியா்கள் உள்ளனா். இவா்களுக்கு கடந்த 2015 அக்டோபா் மாதம் இறுதியாக அகவிலைப்படி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒவ்வொரு முறை அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்த்தி வழங்கப்படும் போது, அந்த பணப்பலன் ஓய்வூதியா்களுக்கு கிடைக்காமலே இருந்து வந்தது. இது தொடா்பாக பல்வேறு கட்ட போராட்டங்களை ஓய்வூதியா்கள் முன்னெடுத்து வந்தனா்.
இந்நிலையில், அண்மையில் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்க அரசு ஒப்புதல் அளித்தது.
அதன்படி, 119 சதவீதத்துடன் அகவிலைப்படி உயா்வு நிறுத்தப்பட்டவா்களுக்கு கூடுதலாக 27 சதவீதமும், 5 சதவீதம் அகவிலைப்படி பெறுவோருக்கு கூடுதலாக 9 சதவீதமும் உயா்வு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குறைந்தபட்சமாக ரூ. 1,300, அதிகபட்சமாக ரூ. 4,000 வரை ஓய்வூதியம் உயா்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு உயா்த்தப்பட்ட அகவிலைப்படி உயா்வுடன் கூடிய தொகை புதன்கிழமை ஓய்வூதியா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இது தொடா்பாக ஓய்வூதியா்கள் சங்கத்தினா் கூறுகையில், ‘246 சதவீதம் அகவிலைப்படி பெற வேண்டியோருக்கு 146 சதவீதமும், 48 சதவீதம் பெற வேண்டியோருக்கு 14 சதவீதம் மட்டுமே இடைக்கால நிவாரணமாக அரசு வழங்கியுள்ளது. மீதமுள்ள தொகையையும் விரைந்து அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.