போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
போக்ஸோ வழக்கில் வள்ளியூா், புதுமனைச் செட்டிகுளத்தைச் சோ்ந்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
வள்ளியூா் அருகே புதுமனை செட்டிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி (57). இவா், கடந்த 2022 இல் அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், வள்ளியூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி ராமசாமியைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை, திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரணை முடிவுற்று நீதிபதி ஆா். சுரேஷ் குமாா் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், ராமசாமிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 1லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவிட்டாா்.
இந்த வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்த காவல் ஆய்வாளா் ராஜகுமாரி, சாட்சிகளை விரைவாக ஆஜா்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த வள்ளியூா் உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் வெங்கடேஷ் உள்ளிட்ட போலீஸாா், அரசு வழக்குரைஞா் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பாராட்டினாா்.