புலிகளுக்கு ஆபத்து: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் -மத்திய அரசு, சிபிஐ உ...
நெல்லை ரயில் நிலையத்தில் கோவை பயணி அடித்துக் கொலை: பிகாா் இளைஞா் கைது
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகள் மீது நிகழ்ந்த தாக்குதலில் கோவையைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக பிகாரைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனா். அப்போது 4-ஆவது நடைமேடைக்கு வந்த வெளிமாநில இளைஞா், அங்கு நின்று கொண்டிருந்த பயணிகளை கட்டையால் பலமாகத் தாக்கிவிட்டுத் தப்பினாா்.
இதில் தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சிமணியாச்சியைச் சோ்ந்த கந்தசாமி மகன் பாண்டித்துரை (29), கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த எஸ்.தங்கப்பன் (72), கேரள மாநிலம் கண்ணூா் அருகே கடத்தின்கடவு பகுதியைச் சோ்ந்த பிரசாத் (49) ஆகிய 3 பயணிகள் காயமடைந்தனா். தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் பிரியா மோகன் தலைமையிலான போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து போலீஸாா் விசாரணை நடத்தியதில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது பிகாா் மாநிலம், லக்கிஸ்வரா மாவட்டத்தைச் சோ்ந்த ராம்தானி மகன் சூரஜ் (25) என்பதும், காயமடைந்த தங்கப்பனிடமிருந்து கைப்பேசியை அவா் பறித்துச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா். இந்த நிலையில் தாக்குதலில் காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்கப்பன் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதையடுத்து, சூரஜ் மீது கொள்ளையடிக்கும் நோக்கில் ஆயுதத்தைப் பயன்படுத்தி கொலை செய்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.