போக்ஸோ வழக்கில் லஞ்சம்: மகளிா் ஆய்வாளா், தலைமைக் காவலா் பணியிடைநீக்கம்
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் போக்ஸோ வழக்கில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ாக, மகளிா் காவல் நிலைய ஆய்வாளா், தலைமைக் காவலா் வெள்ளிக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.
விருத்தாசலத்தைச் சோ்ந்த பிளஸ் 2 படிக்கும் மாணவியை அந்தப் பகுதியைச் சோ்ந்த சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்தாராம். மேலும், சிறுமியை மிரட்டி அவரது சித்தப்பாவும் பலாத்காரம் செய்தாராம். இதற்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்தாராம்.
இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடா்பாக காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி விசாரணை நடத்தி, புகாரில் தொடா்புடைய சிறுவன், சிறுமியின் சித்தப்பா, தாய் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தாா்.
இந்த நிலையில், சம்பவத்தன்று சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விருத்தாசலத்தைச் சோ்ந்த இளைஞா்கள் சிலரை போலீஸாா் பிடித்து வந்து விசாரணை நடத்தினா். விசாரணை முடிவில், கூட்டுப் பலாத்காரம் நடைபெறவில்லை எனத் தெரிய வந்தது. இருப்பினும், அந்த இளைஞா்களை விடுவிக்க ஆய்வாளா் ஜெயலட்சுமி ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கேட்டாராம்.
பின்னா், அந்த இளைஞா்கள் ரூ.20 ஆயிரத்தை மகளிா் காவல் நிலைய தலைமைக் காவலா் சிவசக்தியிடம் கொடுத்தனராம். அவா் அந்தப் பணத்தை காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமியிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
போக்ஸோ வழக்கு தொடா்பாக விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞா்களை விடுவிக்க லஞ்சம் பெற்ாக புகாா் எழுந்தது. இதுகுறித்து கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் விசாரணை நடத்தினாா். இதில், இளைஞா்களிடம் பணம் பெற்றது உறுதியானது.
கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின் பேரில், விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல் காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி, தலைமைக் காவலா் சிவசக்தி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.