போடி-மதுரை ரயில் பாதையில் மின்சார எஞ்ஜினை இயக்கி சோதனை!
போடி-மதுரை ரயில் பாதையில் ஞாயிற்றுக்கிழமை மின்சார ரயில் எஞ்ஜின் இயக்கி சோதனை செய்யப்பட்டது.
போடி-மதுரை அகல ரயில் பாதையில் மதுரையிலிருந்து போடிக்கு தினசரி விரைவு ரயிலும், போடியிலிருந்து சென்னைக்கு வாரத்துக்கு மூன்று நாள்கள் விரைவு ரயிலும் இயக்கப்பட்டு வருகின்றன. போடியிலிருந்து மதுரை வரை 90.5 கி.மீ. தொலைவுக்கு டீசல் எஞ்ஜின் மூலம் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மதுரையிலிருந்து சென்னைக்கு மின்சார எஞ்ஜின் மூலம் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
போடியிலிருந்து சென்னைக்குச் செல்லும் ரயிலும், சென்னையிலிருந்து போடிக்கு வரும் ரயிலும் மதுரை ரயில் நிலையத்தில் 45 நிமிடங்கள் வரை நிறுத்தப்பட்டு, டீசல் எஞ்ஜின் மின்சார எஞ்ஜினாகவும், மின்சார எஞ்ஜின் டீசல் எஞ்ஜினாகவும் மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதனால், பயணிகள் மதுரை ரயில் நிலையத்தில் 45 நிமிஷங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதைத் தவிா்க்க போடி-மதுரை இடையே 90.5 கி.மீ. தொலைவு ரயில் பாதை ரூ. 90 கோடியில் மின்சார ரயில் பாதையாக மாற்றப்பட்டது. இந்தப் பணிகள் கடந்த டிசம்பா் மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து, இந்த மின்சார ரயில் பாதையில் நவீன இயந்திர ரயில் எஞ்ஜின்கள் மூலம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 10.55 மணிக்கு மின்சார ரயில் எஞ்ஜின் மதுரையிலிருந்து போடிக்கு இயக்கி சோதனை செய்யப்பட்டது. இந்த எஞ்ஜின் நண்பகல் 12.33 மணிக்கு போடியை வந்தடைந்தது. இந்த ரயில் எஞ்ஜினில் மதுரை ரயில்வே துணை முதன்மை மின்னியில் பொறியாளா் தாமரைச்செல்வன், செயற்பொறியாளா் எஸ். முத்துக்குமாா் ஆகியோா் பயணித்து ஆய்வு செய்தனா். இவா்கள் ரயில் எஞ்ஜினில் பொருத்தப்பட்டிருந்த பிரத்யேக கண்ணாடி மூலம் பான்டோகிராப் கருவி மின் கம்பிகளில் சரியாக உரசி வருகிா, சரியாக இயங்குகிா என ஆய்வு செய்தனா்.
பின்னா், மீண்டும் பிற்பகலில் போடியிலிருந்து இந்த எஞ்ஜின் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றது. இதைத்தொடா்ந்து, பெட்டிகளுடன் கூடிய ரயில் எஞ்ஜினை இயக்கி சோதனை செய்யப்பட்டு, அதன் பிறகு போடியிலிருந்து மின்சார ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.