Top News: BJP கூட்டணியிலிருந்து OPS விலகல் டு ம.பி-யில் 23000 பெண்கள் மாயம் வரை ...
போரை நிறுத்தியதாக மீண்டும் பேச்சு! எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறாரா டிரம்ப்.?!
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை தான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவிச் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சிலர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டை தீவிரமடைந்தது. பின்னர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறி, இரு நாடுகளுக்கும் இடையேயான சண்டை நிறுத்தம் செய்யப்பட்டது.
பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சியதன் அடிப்படையிலேயே போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மீண்டும் மீண்டும் கூறிவருகின்றனர்.
ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப்போ தான் மட்டுமே தலையிட்டு இந்தப் போரை நிறுத்தியதாக மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறார். இந்த கருத்துக்கு மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பான 16 மணி நேர விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுவரை 29 முறை சொல்லிவிட்டார், அவர் ஒரு பொய்யர் என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் சொல்வாரா? என ராகுல் காந்தி கடுமையாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த விவகாரம் பூதகரமாக வெடித்திருக்கும் நிலையில், 30-வது முறையாக இந்தப் போரை தான் தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஒரு முறை தெரிவித்துள்ளார்.
ஸ்காட்லந்து சென்றிருக்கும் அதிபர் டிரம்ப் வாஷிங்டன் வருவதற்கு முன்னதாக அபெர்டீனில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர்களிடம் பேசுகையில், “இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. ஒருவேளை இந்தியா இந்த வர்த்தக ஒப்பந்தத்துக்கு முடிவு எட்டப்படவில்லை என்றால் 25 சதவிகித இறக்குமதி வரியை எதிர்கொள்ளக்கூடும். ஆம், நான் அப்படித்தான் நினைக்கிறேன்.
இந்தியா எனது நண்பர். எனது வேண்டுகோளின் பேரில் அவர்கள் (இந்தியா) பாகிஸ்தானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவந்தனர்” எனத் தெரிவித்திருந்தார்.
கடந்த 80 நாள்களில் மட்டும் அதிபர் டிரம்ப் கிட்டத்தட்ட 30 முறைக்கும் மேல் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவந்ததாக மீண்டும் மீண்டும் தெரிவித்திருக்கிறார்.
டிரம்ப்பின் கருத்தை பிரதமர் மோடி முற்றிலுமாக தவிர்த்து வந்தாலும், அவரின் கருத்துக்கு எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Trump said they ended the war with Pakistan at my request
இதையும் படிக்க :வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 20 - 25% வரி! - இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை