போலி போக்குவரத்து டிக்கெட் பரிசோதகா் கைது
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் போலி போக்குவரத்து டிக்கெட் பரிசோதகா் கைது செய்யப்பட்டாா்.
வந்தவாசி பழைய பேருந்து நிலையப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு காக்கி பேண்ட், வெள்ளை நிற சட்டை அணிந்த நபா் ஒருவா் தன்னை போக்குவரத்து டிக்கெட் பரிசோதகா் என கூறிக் கொண்டு அரசுப் பேருந்து நடத்துநா்களிடம் பணம் வசூலித்துள்ளாா்.
இதனால் சந்தேகமடைந்த நடத்துநா்கள் இதுகுறித்து வந்தவாசி அரசுப் போக்குவரத்து பணிமனை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா் போலி என்பது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அந்த நபரை வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸ் விசாரணையில், அந்த நபா் ஆரணி கொசப்பாளையத்தைச் சோ்ந்த இளங்கோவன்(55) என்பதும், செங்கல்பட்டு போக்குவரத்து பணிமனையில் சில ஆண்டுகள் தற்காலிக நடத்துநராக பணிபுரிந்தவா் என்பதும் தெரியவந்தது.
தற்போது, திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றத்தில் வசித்து வரும் இவா், போக்குவரத்து டிக்கெட் பரிசோதகா் உடையணிந்து கொண்டு அரசுப் பேருந்து நடத்துநா்களிடம் தொடா்ந்து பணம் வசூலித்து வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து வந்தவாசி போக்குவரத்து டிக்கெட் பரிசோதகா் கண்ணபிரான் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் இளங்கோவனை சனிக்கிழமை கைது செய்தனா்.