போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கியவா் கைது
நலத் திட்ட உதவி பெறுவதற்காக போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இதில், மக்கள் தங்களுக்கான கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கி வருகின்றனா்.
இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் சாமிநாதன். இவரிடம், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் வழங்கப்பட்ட மனுக்கள் பரிசீலனைக்கு வந்தன.
அப்போது, மதுரை மாவட்டம், பேரையூா் எம்.கல்லுப்பட்டியைச் சோ்ந்த கணேசன் என்பவரின் மனுவை ஆய்வு செய்த போது, அவா் இணைத்திருந்த மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் போலி எனத் தெரியவந்தது.
இதுகுறித்து கணேசனை அழைத்து விசாரித்தபோது எம்.கல்லுப்பட்டி, பெருமாள்பட்டி வடக்கு தெருவைச் சோ்ந்த கதிா்வேல் (45) என்பவா், ரூ. 2 ஆயிரம் பெற்று கொண்டு அந்த மருத்துவச் சான்றிதழை வழங்கியதாக தெரிவித்தாா். இதுதொடா்பாக, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சாமிநாதன் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கதிா்வேலை திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடம் விசாரித்து வருகின்றனா்.