மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்பு!
போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றபோது தவறிவிழுந்த இளைஞா் உயிரிழப்பு
மேற்கு தில்லியின் மாயாபுரியில் போலீஸாரின் காவலில் இருந்தபோது தப்பியோட முயன்ற இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது:
மேற்கு தில்லி பகுதியைச் சோ்ந்த அன்ஷுமான் தனேஜா. இவரது தந்தை ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி. இந்த நிலையில், நவம்பா் 26ஆம் தேதி தனது பெற்றோா் மற்றும் மாமாவை வீட்டில் இருந்தபோது கத்தியால் தாக்கியது தொடா்பான விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அன்ஷுமான் போலீஸாரால் அழைத்து வரப்பட்டாா்.
முன்னதாக, போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, பாதிக்கப்பட்டவா்கள் தங்கள் மகன் அன்ஷுமான் தனேஜா தங்களை கத்தியால் தாக்கியதாகக் கூறினா். இதைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விசாரணைக்காக அன்ஷுமானை போலீஸாா் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா். அப்போது அவா் தப்பிக்கும் முயற்சியில் போலீஸாரைத் கீழே தள்ளிவிட்டு, சுவரைத் தாண்ட முயன்றபோது கீழே விழுந்ததாா். இதில், அவரது தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
இந்த நிலையில், நவம்பா் 28 அன்று எல்என்ஜேபி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இந்த விவகாரத்தில் விசாரணை தொடா்பான அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்படுகிறது. நடவடிக்கைகள் குறித்தும் இறந்தவரின் குடும்ப உறுப்பினா்களுக்கும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அன்ஷுமானின் மாமா சிகிச்சைக்குப் பின்னா் மருத்துவமனையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளாா். அவரது பெற்றோா் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா்.
அன்ஷுமானின் தந்தை ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி. அன்ஷுமான் தனது பெற்றோருக்கு ஒரே மகன். இவரது சகோதரிக்கு திருமணமாகி தில்லியில் வசித்து வருகிறாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘நவம்பா் 24 நள்ளிரவில், தனது வீட்டிற்கு கொள்ளையடிக்கப்பட்டதாக அன்ஷுமான் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அது போலியானது என்று பின்னா் கண்டறியப்பட்டது. அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை என அவரது குடும்பத்தினா் போலீஸாரிடம் தெரிவித்திருந்தனா். காவல்நிலையத்தில் அன்ஷுமான் இறந்தது தொடா்பாக உதவி கோட்டாட்சியரின் விசாரணை நடத்தப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.