கூலித் தொழிலாளி கொலை சம்பவம்: மற்றவா்களையும் கைது செய்யக் கோரி கிராம மக்கள் காத்...
போலீஸ் காவல்: ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞானசேகரனை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் தீவிர விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக எழுந்த புகார், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அண்ணா நகர் காவல் துணை ஆணையர் சிநேக பிரியா தலைமையிலான மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல் கட்டமாக ஆய்வு நடத்தியதை தொடர்ந்து, கைதான ஞானசேகரன் வீட்டில் சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடத்தி, கத்தி, மடிக்கணினிகள், பென் டிரைவ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்த பின்னர், நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவலில் எடுத்து விசாரிக்க நீதித்துறை நடுவரிடம் முறையிட்டனர்.
இதனை அடுத்து நேற்று இரவு ஏழு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வு குழுவினருக்கு நீதித்துறை நடுவர் அனுமதி அளித்திருந்தார். இந்த நிலையில் முதல் நாளான இன்று ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டபோது, மற்றொரு சார் குறித்து மாணவி அளித்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஞானசேகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட மடிக்கணினியில் உள்ள காணொளி குறித்தும் பல்வேறு கேள்விகளோடு ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் எப்ஐஆர் எப்படி கசிந்தது என்ற கோணத்தில் புலனாய்வு குழுவினர், எழுத்தாளர் மருது பாண்டியிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.