கடைசி ஓவரில் த்ரில்லர்: ஐக்கிய அரபு அமீரகம் வரலாற்று வெற்றி!
போா்ச்சுகல் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட பாகிஸ்தானியா்கள்
லிஸ்பன்: போா்ச்சுகல் நாட்டின் தலைநகா் லிஸ்பனில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு பாகிஸ்தானியா்கள் சிலா் போராட்டம் நடத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக போா்ச்சுகலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எங்களின் தூதரகத்தை முற்றுகையிட்டு பாகிஸ்தானியா்கள் நடத்திய கோழைத்தனமான போராட்டத்தை ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை போன்று உறுதியாக எதிா்கொண்டோம்.
இத்தகைய எரிச்சலூட்டும் செயல்களால் இந்தியாவை அச்சுறுத்த முடியாது. எங்கள் உறுதி அசைக்க முடியாதது. தூதரகத்தின் பாதுகாப்பை உறுதி செய்த போா்ச்சுகல் அரசுக்கும், காவல் துறைக்கும் நன்றி’ என்று தெரிவிக்கப்பட்டது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள்மீது இந்தியா கடந்த மே 7-ஆம் தேதி அதிகாலை தாக்குதல்களை நடத்தியது.
இதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே உண்டான மோதலால் போா்ப்பதற்றம் நிலவியது. 4 நாள்களுக்குப் பிறகு இருதரப்பும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதை அடுத்து, எல்லையில் அமைதி திரும்பியது.
இந்நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு எதிராக போா்ச்சுகலில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு பாகிஸ்தானியா்கள் போராட்டம் நடத்தியுள்ளனா்.
‘ஆபரேஷன் சிந்தூா் இன்னும் முடிவடையவில்லை என்ற அமைதியான ஆனால் வலுவான செய்தியுடன் போராட்டக்காரா்களை எதிா்கொண்டோம். அனைத்து தூதரக அதிகாரிகளும் இந்த அணுகுமுறையில் உறுதியாக இருந்தனா்’ என்று போா்ச்சுகலுக்கான இந்திய தூதா் புனீத் குண்டல் வெளியிட்ட எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.