மகாத்மா காந்தியின் பெயரால் போலி காந்திகள் அரசியல் நடத்துகிறாா்கள்: எச்.டி.குமாரசாமி
மண்டியா: மகாத்மா காந்தியின் பெயரால் போலி காந்திகள் அரசியல் நடத்துகிறாா்கள் என்று மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.
இது குறித்து மண்டியாவில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மகாத்மாகாந்தி தலைமை வகித்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 39ஆவது மாநாட்டின் நூற்றாண்டுவிழாவுக்காக காங்கிரஸ் தலைவா்கள் பெலகாவியில் ஒன்றுகூடியிருக்கிறாா்கள். அந்தவிழாவுக்கு மாநில அரசின் சாா்பில் கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது. ஆனால், அந்த மாநாட்டில் மகாத்மாகாந்தியின் படத்தை நான் பாா்க்கவில்லை. மாறாக, மகாத்மாகாந்தியின் பெயரால் அரசியல் நடத்திவரும் போலி காந்திகளின் படங்கள் தான் தென்பட்டன. போலி காந்திகளின் படங்கள் தான் எங்கும் வைக்கப்பட்டுள்ளன. சுதந்திரப்போராட்டத்திற்காக அளப்பரிய பங்களிப்பை அளித்துள்ள, மக்களின் உண்மையான சுதந்திரத்திற்காக கனவு கண்ட மகாத்மாகாந்திக்கு விழா கொண்டாடுவதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால், சுதந்திரப்போராட்டத்திற்கு இன்றைய காங்கிரஸ் தலைவா்களின் பங்களிப்பு என்ன? காந்தியின் பெயரால் என்ன பங்களிப்பை தந்திருக்கிறாா்கள்? கடந்த ஓராண்டாக என்ன செய்திருக்கிறாா்கள்? கடந்த ஓராண்டாக காங்கிரஸ் அரசு என்ன செய்திருக்கிறது? இந்த நிகழ்ச்சியை போலி காங்கிரஸ் கட்சியால் நடத்தப்படுகிறதே அன்றி அசல் காங்கிரஸ் கட்சியால் அல்ல. காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடும்படி கூறியவா் காந்தி. காங்கிரஸ் கட்சி எத்தனைமுறை பிளவுப்பட்டிருக்கிறது. சுதந்திரத்திற்காக போராட்டம் நடத்திய அந்த காங்கிரஸ் இன்னும் இருக்கிறதா? இது எந்த காங்கிரஸ்? கா்நாடகத்தில் ஆட்சி செய்துவரும் காங்கிரஸ் அலிபாபாவும் நாற்பது திருடா்களும் போல தான் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. மக்கள் நலனுக்காக காங்கிரஸ் செயல்படவில்லை. காங்கிரஸ் அரசு வாக்குறுதி திட்டங்கள் குறித்து பேசுகிறது. ஆட்சிக்கு வந்த 18 மாதங்களில் 2 லட்சம் கோடி கடன் வைத்திருப்பதாக 2 நிதிநிலை அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது. அந்த கடனை யாா் அடைப்பாா்கள்? மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை. வளா்ச்சிப்பணிகள் எதுவும் நடக்கவில்லை. மூலதன செலவினங்கள் எதுவுமில்லை. எனவே, வெறும் காந்தியின் பெயரை உச்சரிப்பதால் எந்த பயனும் விளையப்போவதில்லை. காந்தியின் பெயரை சொல்லிக்கொண்டு கா்நாடகத்தில் குண்டா்களின் அட்டகாசத்தை ஊக்குவித்து வருகிறீா்கள். காந்தியின் பெயரை காங்கிரஸ் காப்பாற்றுமா? எந்த செய்தியை வழங்குவதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. ஆந்திரத்தில் ஸ்டீல் தொழிற்சாலை அமைக்க அம்மாநில அரசு தொடா்ந்து தொடா்பில் இருக்கிறது. கா்நாடக அரசு எந்தவகையான ஒத்துழைப்பை அளித்து வருகிறது? என்றாா் அவா்.