எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. மாணவா்களின் கல்வி உதவித் தொகை: ஆண்டு குடும்ப வருமான உச்...
மகாராஷ்டிரா: ரூ.9.3 லட்சம் கோடி... அதிகரித்த மாநில கடன்; பழைய திட்டங்கள் ரத்து - பட்ஜெட் ஹைலைட்ஸ்!
மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு புதிய அரசு பதவியேற்று தாக்கல் செய்யப்படும் புதிய பட்ஜெட் மீது மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. துணை முதல்வர் அஜித் பவார் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் பெண்கள் மிகவும் எதிர்பார்த்த மகளிர் உரிமைத்தொகை ரூ.1500-லிருந்து 2100 ஆக அதிகரிக்கப்படவில்லை. தேர்தலுக்கு முன்பு இத்தொகை 2100 ஆக அதிகரிக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தனர். அதோடு இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 10 ஆயிரம் கோடி அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் அஜித் பவார் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. உத்தவ் தாக்கரே ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட மலிவு விலை சாப்பாடு திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் அது தொடர்பாக எந்த வித அறிவிப்பும் இடம் பெறவில்லை.

ஏற்கனவே இருந்த திட்டங்களுக்குத்தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 30 லட்சத்திற்கு அதிகமான மதிப்புள்ள எலக்ட்ரிக் கார்களுக்கான சாலை வரி 6 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. 30 லட்சத்திற்கு குறைவான வாகனங்கள் தொடர்ந்து வரியில் இருந்து விலக்கு பெறும் என்றும், எல்பிஜி மற்றும் சி.என்.சி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சித்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 45 சதவீதம் மாநிலத்தின் பின் தங்கிய பகுதிகளாக இருக்கும் விதர்பா மற்றும் மராத்வாடாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சத்ரபதி சிவாஜி, சாம்பாஜி உட்பட தலைவர்களுக்கு 12 நினைவு சின்னங்கள் கட்டப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் ஒன்று முறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு மும்பையில் கட்டப்படுகிறது. மாநிலத்தின் கடன் தொகை 9.3 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 10 சதவீதத்திற்கும் அதிகமாகும். வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்ற தேவையான ரூ.1.6 லட்சம் கோடியை வெளியில் இருந்து குறைந்த வட்டிக்கு கடனாக வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை ரூ.45891 கோடியாக இருந்தது. 40 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் புதிய தொழில் கொள்கை அறிவிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக கல்வி போன்ற பெரும்பாலான திட்டங்களுக்கு நிதி மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.