நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டா் அளவில் 7.1-ஆகப் பதிவு!
மகாராஷ்டிரா: வேகத்தடை மீட்டுக்கொடுத்த உயிர்? - நடந்தது என்ன?
இறந்ததாக அறிவிக்கப்பட்டவர்கள் சிலநேரங்களில் உயிரோடு எழுவதுண்டு. மகாராஷ்டிராவில் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூர் மாவட்டம் கசபா என்ற இடத்தை சேர்ந்தவர் பாண்டுரங்(65). கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு திடீரென பாண்டுரங்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சையளித்து பார்த்தனர். ஆனால் பின்னர் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். இதையடுத்து உறவினர்கள் அவரது உடலை ஆம்புலன்ஸ் ஒன்றில் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். ஆம்புலன்ஸில் பாண்டுரங் மனைவியும் இருந்தார். ஆம்புலன்ஸ் வேகத்தடை ஒன்றின் மீது வேகமாக ஏறி இறங்கியது. அப்போது பாண்டுரங் கைவிரல் அசைவதை அவரது மனைவி கவனித்தார்.
உடனே டிரைவரிடம் சொல்லி ஆம்புலன்ஸை வேறு ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டர்கள் பாண்டுரங்கிற்கு தீவிர சிகிச்சை கொடுத்தனர். மருத்துவமனையில் இரண்டு வாரம் இருந்த பாண்டுரங்கிற்கு டாக்டர்கள் இருதய ஆபரேசன் செய்தனர். அதன் பிறகு பாண்டுரங் பிழைத்துக்கொண்டார். இரண்டு வாரத்திற்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு உயிரோடு வந்து சேர்ந்தார். உறவினர்கள் அனைவரும் வந்து அவரது உடல் நலத்தை விசாரித்துவிட்டு சென்று கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பண்டர்பூர் பாண்டுரங் கோயிலுக்கு கால்நடையாக பயணம் மேற்கொள்ளும் பாண்டுங் தனக்கு நடந்த சம்பவம் குறித்து கூறுகையில், ''நடைபயிற்சிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து அமர்ந்து தேனீர் அருந்தினேன். அந்நேரம் மயக்கம் வருவது போலவும், மூச்சுவிட சிரமமாகவும் இருந்தது.
அதன் பிறகு பாத்ரூம் சென்று வாந்தி எடுத்தேன். அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்கு ஞாபகம் இல்லை'' என்றார். இது குறித்து பாண்டுரங் மனைவி கூறுகையில், `மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்டவுடன் அவரது உடலை வீட்டிற்கு எடுத்து வந்து கொண்டிருந்தோம். ஆம்புலன்ஸ் வேகத்தடை ஒன்றை கடந்தபோது அவரது கை விரலில் அசைவு இருந்ததை பார்க்க முடிந்தது’ என்றார். மருத்துவமனையில் இருந்து பிணமாக வந்தவருக்கு ஸ்பீடு பிரேக்கர் வாழ்வு கொடுத்திருக்கிறது.