மகா கும்பமேளாவில் இதுவரை 33 கோடி பக்தர்கள் புனித நீராடல்!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் இதுவரை 33 கோடி பக்தர்கள் புதித நீராடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தி நிகழ்வுக்கு உலகத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடியது இதுவே முதல்முறை என்ற சாதனையையும் மகா கும்பமேளா படைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.
இதுவரை நேற்று வரையிலான தரவுகளின்படி, இதுவரை 33 கோடி பக்தர்கள் கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
ஜனவரி மாதம் வரையில் 29.6 கோடி பக்தர்கள் கும்பமேளாவுக்கு வருகைபுரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பிப்ரவரி முதல் நாளில் சுமார் 3 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
வார இறுதி நாள்கள் என்பதால் கடந்த இரு நாள்களாக பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.