மக்கள் குறைதீா் கூட்டம்: 435 மனுக்கள் அளிப்பு
நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்றுவாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 435 மனுக்களை பொதுமக்கள் வழங்கினா். அவற்றைப் பெற்றுக் கொண்டு உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் பரிந்துரைத்தாா்.
பின்னா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அண்ணா பிறந்தநாள் மிதிவண்டி போட்டியில் வெற்றிபெற்ற 60 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 70,500 மதிப்பில் பரிசுத் தொகை மற்றும் தகுதிச் சான்றிதழ்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஒருவருக்கு ரூ. 15,750 மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலியையும் அவா் வழங்கினாா். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ்.கோகிலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.