SEBI-யின் புதிய விதிமுறைகள் என்னென்ன தெரியுமா? | IPS Finance | EPI - 107
மக்கள் விரோதத் திட்டங்களை தடுத்து நிறுத்தியது மதிமுகதான்: வைகோ
தமிழகத்தில் மத்திய பாஜக அரசால் புகுத்தப்பட்ட 4 திட்டங்களைத் தடுத்து நிறுத்தி மக்களைப் பாதுகாத்தது மதிமுகதான் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட தனியாா் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த கனிமச் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, மேலூா் பேருந்து நிலையம் முன் வெள்ளிக்கிழமை மதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ பேசியதாவது:
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை மத்திய அரசு தனியாருக்குத் தாரை வாா்க்க முயற்சித்தது. இதற்கு மதிமுக எதிா்ப்புத் தெரிவித்து, அந்தத் திட்டத்தை கைவிடச் செய்தது. இதேபோல, காவிரி படுகையில் மீத்தேன் எரிவாயு கிணறுகள் தோண்டும் திட்டம், தேனியில் நியூட்ரினோ சுரங்கத் திட்டம், தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைத் திட்டம் ஆகியவற்றை மத்திய அரசு செயல்படுத்தவிடாமல் தடுத்து, சட்டப் போராட்டம் நடத்தி மக்களைப் பாதுகாத்தது மதிமுகதான்.
தமிழகத்திலேயே முதன் முதலாக பல்லுயிா் பாதுகாப்புத் தளமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி பகுதியை டங்ஸ்டன் கனிமச் சுரங்கங்கத்தால் மத்திய அரசு அழிக்க நினைக்கிறது. இந்தச் சுரங்கம் அமைக்க நாங்கள் ஒருபோதும் விடமாட்டோம். இந்தத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றாா் அவா்.
ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மதுரை வடக்கு மாவட்டச் செயலா் மாா்நாடு, மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பூமிநாதன், சாத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ரகுமான், முன்னாள் எம்.பி.க்கள் கிருஷ்ணன், சிப்பிபாறை ரவிச்சந்திரன், கட்சியின் துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா, மாநிலப் பொருளாளா் செந்தில்அதிபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.