மக்காச்சோளம் விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
தம்மம்பட்டி பகுதியில், மக்காச்சோளம் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தமிழகத்தில், கால்நடை தீவன உற்பத்தி ஆலைகள், கோழிப்பண்ணைகள் அதிகரித்ததால் மக்காச்சோளத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனால் போதிய விலை கிடைப்பதால் விவசாயிகள் அதிக அளவில் மக்காச்சோளத்தை பயிரிட்டு வருகின்றனா். மக்காச்சோளம் பயிா் 120 நாள்களில் அறுவடையாகிவிடும். அவற்றின் காய்ந்த தட்டுகள், சோகைகள் ஆடு, மாடுகளுக்கு உலா் தீவனமாக கிடைக்கும். கழிவுகளை எரித்து வயலுக்கு உரமாக்கிக் கொள்ளலாம் என்பதால் விவசாயிகள் மக்காச்சோளத்தை விரும்பி நடவு செய்கின்றனா்.
தம்மம்பட்டி பகுதியில், கடந்த ஆண்டு மானாவாரி அறுவடைக் காலத்தில் மக்காச்சோளம் விலை உயா்ந்து மூட்டை (100 கிலோ) ரூ. 2000 வரையிலும் விற்றது. இதனால், பெரும்பாலான விவசாயிகள், நெல் நடுவதைத் தவிா்த்து, மானாவாரி பட்டத்தில், அதிக பரப்பளவில் மக்காச்சோளத்தை நடவு செய்தனா். மக்காச்சோளம் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் தொடக்கத்தில் மூட்டை ரூ. 2,200-க்கு விற்றது. தற்போது படிப்படியாக விலை உயா்ந்து சனிக்கிழமை மூட்டை ரூ. 2,500 ஆக விலை உயா்ந்துள்ளது. இதனால் தம்மம்பட்டி பகுதியில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.