மணிப்பூரில் தொடரும் கைதுகள்..ஆயுதங்கள் பறிமுதல்! எல்லையில் உலகப் போர் குண்டு?
மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் மூலம் தடைசெய்யப்பட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த 8 கிளர்ச்சியார்கள் கைது செய்யப்பட்டதுடன், ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மணிப்பூரின், ஜிரிபம், பிஷ்னுப்பூர், காக்சிங், தெங்னௌபால், கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் ஆகிய மாவட்டங்களிலுள்ள மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக, பாதுகாப்புப் படையினர் அங்கு பதுங்கியிருந்த கிளர்ச்சியார்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மத்திர ரிசர்வ் காவல் படை, மணிப்பூர் மாநில காவல் துறை, எல்லைப் பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை மற்றும் இந்திய ராணுவத்தினர் இணைந்து, மோப்ப நாய்களின் உதவியுடன் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளின் மூலம் தடைசெய்யப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்துடன், இந்தக் கூட்டு நடவடிக்கைகளில், பல்வேறு ரக துப்பாக்கிகள், ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட கிளர்ச்சியாளர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள், மாநில காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், பணப்பறிப்பில் ஈடுபட்ட வெவ்வேறு இயக்கங்களைச் சேர்ந்த 5 கிளர்ச்சியார்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உலகப் போர் குண்டு?
இந்தியா மற்றும் மியான்மர் எல்லையில் அமைந்துள்ள மணிப்பூரின் தெங்னௌபால் மாவட்டத்தில், மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் கிடந்த வெடிகுண்டை, பாதுகாப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பத்திரமாக மீட்டு செயலிழக்கச் செயதனர்.
அந்த வெடிகுண்டானது, இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்ததாகக் இருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
SUMMARY
Arrests continue in Manipur. Weapons seized! World War II bomb on the border?
இதையும் படிக்க: குறைதீர் கூட்டத்தில் கூடுதல் ஆணையருக்கு அடி, உதை..! தரதரவென வெளியே இழுத்துச் சென்றதால் பரபரப்பு!