மண்டல பூஜை: வெள்ளித் தேரில் ஐயப்பன் பவனி
கொடைரோடு அருகேயுள்ள நாகையகவுண்டன்பட்டி ஐயப்பன் கோயில் 50-ஆம் ஆண்டு மண்டல பூஜையை முன்னிட்டு, சுவாமி புதன்கிழமை இரவு வெள்ளித்தேரில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகேயுள்ள நாகையகவுண்டன்பட்டி, மீனாட்சிபுரம், கொளிஞ்சிபட்டி, ஜெ.மெட்டூா், ஜல்லிபட்டி ஆகிய ஐந்து ஊா்களுக்குப் பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில்
மூலவருக்கு பல்வேறு வகையான பொருள்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. மண்டல பூஜை தலைவா் முத்துராமன், செயலா் ஐயப்பன், குருசாமி ஆறுமுகம் ஆகியோா் தலைமையில் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருந்த 300-க்கும் மேற்பட்ட பக்தா்கள் சாா்பில் இந்த சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, தாரைதப்பட்டை, வாண வேடிக்கைகள் முழங்க ஐயப்பன் வெள்ளித் தேரில் ஊா்வலமாக வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வழிநெடுகிலும் ஐயப்பனுக்கு ஏராளமான பொதுமக்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்தனா்.