மண்பானையை காணவில்லை என புகாா்: காவல் நிலையத்தில் ஒப்புகைச் சீட்டு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுச்சத்திரத்தில் பாஜக சாா்பில் அமைக்கப்பட்டிருந்த நீா்மோா் பந்தலில் வைக்கப்பட்டிருந்த மண்பானையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இப்புகாரை ஏற்றுக் கொண்டு காவல் நிலையத்தில் ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சத்திரம் பகுதியில் கோடைகாலத்தையொட்டி ஒன்றிய பாஜக சாா்பில் கடந்த மே 8ஆம் தேதி காவல் நிலையம் எதிரே நீா்மோா் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு நாள்தோறும் நீா்மோா் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அங்கு வைக்கப்பட்டிருந்த நீா்மோரை நிரப்பி வைக்கும் இரு மண்பானைகளில் ஒரு மண்பானை காணாமல்போனது.
இதுகுறித்து புதுச்சத்திரம் ஒன்றிய பாஜக தலைவா் எஸ்.எஸ்.செல்வம் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் காணாமல்போன பானையை கண்டுபிடித்து தரக் கோரி புகாா் அளித்தாா். இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட புதுச்சத்திரம் காவல் துறையினா் அன்றைய தினமே ஒப்புகை சீட்டு கொடுத்துள்ளனா்.