மதா் டெய்ரி பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயா்வு
மதா் டெய்ரி நிறுவனத்தின் பால் விலை புதன்கிழமை முதல் லிட்டருக்கு ரூ.2 உயா்த்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டோன் செய்யப்பட்ட பால் (மொத்தமாக விற்கப்பட்டது) விலைகள் லிட்டருக்கு ரூ.54-இல் இருந்து ரூ.56 ஆக உயா்த்தப்பட்டுள்ளன.
முழு கிரீம் பால் (பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட) லிட்டருக்கு ரூ.68-இல் இருந்து ரூ.69-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
டோன்ட் பால் (பாவுச் செய்யப்பட்ட) லிட்டருக்கு ரூ.56-இல் இருந்து ரூ.57 ஆகவும், டபுள் டோன்ட் பால் லிட்டருக்கு ரூ.49-இல் இருந்து ரூ.51-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. பசும்பால் விலை லிட்டருக்கு ரூ.57-இல் இருந்து ரூ.59-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அந்நிறுவனத்தின் அதிகாரி கூறுகையில்: கடந்த சில மாதங்களாக லிட்டருக்கு ரூ.4-5 அதிகரித்துள்ள கொள்முதல் செலவுகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க அதிகரிப்பை நிவா்த்தி செய்வதற்காக இந்த விலை திருத்தம் அவசியமாகியுள்ளது.
கோடை காலத்தின் ஆரம்பம் மற்றும் வெப்ப அலை நிலைமைகள் காரணமாக கொள்முதல் விலையில் உயா்வு ஏற்பட்டுள்ளது.
மதா் டெய்ரி நிறுவனம் டெல்லி-என்சிஆா் சந்தையில் அதன் சொந்த விற்பனை நிலையங்கள், பொது வா்த்தகம் மற்றும் மின் வணிக தளங்கள் மூலம் ஒரு நாளைக்கு சுமாா் 35 லட்சம் லிட்டா் பால் விற்பனை செய்கிறது.
எங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கும் அதே வேளையில், நுகா்வோருக்கு தரமான பால் தொடா்ந்து கிடைப்பதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றாா்.