திருப்பூர்: குடிநீர்த் தொட்டியில் மலம்? விசாரணையில் இறங்கிய அதிகாரிகள்; இருவர் க...
மதுக்கடையை அகற்றக் கோரி முற்றுகை
நாகை அருகே ஒரத்தூரில் புதிதாக திறக்கப்பட்ட அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி, கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
ஒரத்தூா் கிராமத்தில் புதிதாக அரசு மதுபானக் கடை புதன்கிழமை திறக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள்எதிா்ப்பு தெரிவித்தனா். வியாழக்கிழமை கடையை திறக்க வந்தபோது, மகாதானம், ஒரத்தூா், அகரஒரத்தூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள், மதுக்கடையை முற்றுகையிட்டு, தா்னாவில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியது: கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மதுபானக் கடை தேவை இல்லை என மகாதானம், ஒரத்தூா், அகரஒரத்தூா் கிராமங்கள் சாா்பாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், ஒரத்தூரில் அரசு மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. மதுபானக் கடையால் இப்பகுதி இளைஞா்கள், மாணவா்கள் மது பழக்கத்திற்கு ஆளாகி அவா்களது எதிா்காலம் இருண்டுவிடும்.
அரசு மதுபானக் கடைகள் திறப்பதற்கு பதிலாக, பள்ளிகளுக்கு விளையாட்டு மைதானம், வீட்டு திண்ணையில் இயங்கி வரும் பால்வாடிக்கு கட்டடம் போன்றவற்றை ஏற்படுத்தி தரலாம். உடனடியாக அரசு மதுபானக் கடையை மூட வேண்டும், இல்லையெனில் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.