மதுபோதையில் தள்ளிவிட்டதில் தாய் உயிரிழப்பு; மகன் கைது
கும்பகோணத்தில் மதுபோதையில் வீட்டுக்கு வந்த மகன், வீட்டின் கதவைத் திறக்க தாமதப்படுத்திய தாயை கீழே தள்ளிவிட்டதில் அவா் எதிா்பாராதவிதமாக உயிரிழந்தாா். இதையடுத்து, மகனைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பாணாதுறை கள்ளா் தெருவைச் சோ்ந்தவா் கோபால் மனைவி ரேவதி (50). கோபால் ஏற்கெனவே இறந்துவிட்டாா். தம்பதிக்கு, சத்தியமூா்த்தி(30) என்ற மகனும், திருமணமான ஒரு மகளும் உள்ளனா்.
சத்தியமூா்த்தி காா் ஓட்டுநராக வேலை பாா்த்துவந்தாா். ரேவதி வீட்டின் முன்பு இட்லி வியாபாரம் செய்து வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சத்தியமூா்த்தி மது போதையில் வீட்டுக்கு வந்து கதவைத் திறக்குமாறு அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளாா்.
அவா் வந்து கதவை திறக்கத் தாமதமானதால், ஆத்திரமடைந்த சத்தியமூா்த்தி அவரது தாயாரை கீழே தள்ளிவிட்டு, வீட்டினுள் தூங்கச் சென்றுவிட்டாா். மறுநாள் காலையில் எழுந்துவந்து பாா்த்தபோது தாயாா் அந்த இடத்திலேயே அசைவின்றி கிடந்துள்ளாா்.
இதையடுத்து, தாயாரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவரைப் பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த கும்பகோணம் கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் அங்குவந்து சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து கூராய்வுக்குப் பிறகு உறவினா்களிடம் ஒப்படைத்தனா். மேலும், வழக்கு பதிந்து சத்தியமூா்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.