மதுரை, கோவை மெட்ரோ ரயில்: தமிழக திட்ட அறிக்கை முழுமையாக இல்லை - மாநிலங்களவையில் அமைச்சா் தகவல்
மதுரை மற்றும் கோயம்புத்தூா் மெட்ரா ரயில் திட்டங்களுக்காக தமிழக அரசு சமா்ப்பித்த திட்ட அறிக்கைகள் முழுமையாக இல்லை என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
மத்திய அமைச்சரவையால் கடந்த அக்டோபரில் அங்கீகரிக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் குறித்தும் மதுரை மற்றும் கோயம்புத்தூா் மெட்ரோ ரயிலுக்கு நிலுவையில் உள்ள திட்டங்களை அனுமதிப்பது குறித்தும் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தக் கேள்விகளுக்கு மத்திய நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் சாா்பாக அமைச்சா் ஹா்தீப் சிங் புரி மாநிலங்களவையில் அளித்த பதிலில், ‘கடந்த 2002-ஆம் ஆண்டு, முன்னாள் பிரதமா் வாஜ்பாய் தலைமையிலான மத்திய பாஜக அரசில் மெட்ரோ திட்டங்கள் நாட்டில் தொடங்கப்பட்டன.
தற்போது 23 நகரங்களில் 1,011 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் கட்டமைப்பு செயல்பாட்டில் உள்ளது. மேலும், 979 கி.மீ. தொலைவு கட்டமைப்புக்கு கட்டுமானம் நடைபெற்று வருகிறது. அதாவது, நாட்டின் 29 நகரங்களில் மெட்ரோ செயல்பாட்டில் அல்லது கட்டுமானத்தில் உள்ளது. தற்போதைக்கு சீனா, அமெரிக்காவுக்கு (1400 கி.மீ.) அடுத்து உலகின் மூன்றாவது பெரிய மெட்ரோ ரயில் கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளது. அமெரிக்காவை முந்தி 2-ஆவது பெரிய கட்டமைப்பாக மாறுவதற்கு மாநில அரசுகளின் ஒத்துழைப்பு தேவை.
நகா்ப்புற போக்குவரத்து மாநில அரசுகளின் ஆளுகைக்குட்பட்டது. எனினும், நிதியுதவி அடிப்படையில் மாநில அரசுகளின் மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு ஆதரிக்கிறது.
மூலதனத் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு நிதி மற்றும் சாத்தியக்கூறு அடிப்படையில் விரிவான ஆய்வு தேவைப்படுகிறது. மத்திய அரசு விரைவாக ஆய்வு செய்ய உதவும் வகையில், விரிவான திட்ட அறிக்கைகள், தொடா்புடைய ஆவணங்களுடன் மாநிலங்கள் முறையாக அனுப்ப வேண்டும்.
மதுரை மற்றும் கோயம்புத்தூா் மெட்ரோ திட்டங்களுக்குப் பெறப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில் (டிபிஆா்) அந்த நகரங்களுக்கான தொலைநோக்கு போக்குவரத்து திட்டம் குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை.
முக்கியத் திட்டங்கள் குறித்த ஆய்வறிக்கைகளை விரிவான முறையில் மாநிலங்கள் அனுப்பும்போது, அந்தத் திட்டம் அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். திட்டங்களை முறையாக ஆய்வு செய்யாமல் நாடாளுமன்றத்தில் அதுகுறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: 2017-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் முன்மொழியப்பட்டுவந்த 118.9 கி.மீ. தொலைவு சென்னை மெட்ரோ ரயிலின் 2-ஆம் கட்ட திட்டம், இறுதியாக ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் சமா்ப்பிக்கப்பட்டது.
இந்தக் கூட்டுத் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.7,424 கோடி பங்களிக்கும். அதில் மத்திய அரசு ஏற்கனவே ரூ.5,000 கோடியை விடுவித்துள்ளது. மேலும், ரூ.33,000 கோடிக்கு மேல் வெளி நிதி நிறுவனங்கள் விடுவித்துள்ளன’ என்று குறிப்பிட்டாா்.