மதுரை மல்லிகை சிறப்புத் திட்டம்! மலர்கள் சாகுபடிக்கு ரூ. 8.51 கோடி நிதி ஒதுக்கீடு!
மதுரை மல்லிக்கான சிறப்புத் திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கரில் மல்லிகை செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 15) காலை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
பேரவையில் பேசிய அவர்,
"தினசரி வருமானம் ஈட்டுவதற்கு மலர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 8.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதில், மதுரை மல்லிக்கான சிறப்புத் திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கரில் மல்லிகைச் செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும். இதற்காக ரூ. 1.60 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
2,500 ஏக்கரில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
இதையும் படிக்க | வேளாண் பட்ஜெட்: உழவர் பாதுகாப்புத் திட்ட நிதியுதவி உயர்த்தி அறிவிப்பு!
பாரம்பரிய காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க, ரூ. 2.40 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். வெங்காயத்தை சேமித்து வைத்து விற்பனை செய்ய கிடங்கு அமைப்பதற்கு மானியம் வழங்க ரூ. 18 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
காய்கறிகள் விதை தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். பழச் செடி தொகுப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். பயிர் வகை விதைத் தொகுப்பு 1 லட்சம் இல்லங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும்.
புரதச்சத்து நிரைந்த காளான் உற்பத்தியை ஊக்குவிக்க ஊரக பகுதியில் 5 காளான் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்" என்றார்.
இதையும் படிக்க | வேளாண் பட்ஜெட்: விவசாயிகளுக்கு ரூ. 3.58 லட்சம் கோடி பயிர்க் கடன்!