மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மச்சஹந்தி விவாகம்
மதுரை மீனாட்சி சுந்தேரசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவின் எட்டாம் நாள் விழாவான வெள்ளிக்கிழமை அம்மன், சுவாமி மணம் புரியும் மச்சஹந்தி விவாகம் நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் தெப்பத் திருவிழாவும் ஒன்று. நிகழாண்டு தெப்பத் திருவிழா கடந்த மாதம் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, சுவாமி, அம்மன் தினசரி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மண்டகப்படிகளுக்குச் சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
விழாவின் எட்டாம் நாள் நிகழ்ச்சியாக வலை வீசும் லீலை நடைபெற்றது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை அம்மன், சுவாமி தங்கப் பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பாடாகி கோயிலுக்குள் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினா். இதைத் தொடா்ந்து, அங்கு வலை வீசிய லீலை நடைபெற்றது.
பின்னா், மாலையில் மண்டபத்திலிருந்து மீனாட்சி அம்மன் தங்கப் பல்லக்கிலும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா் தங்கக் குதிரை வாகனத்திலும் புறப்பாடாகி சித்திரை வீதிகளில் உலா வந்து, பழைய திருக்கல்யாண மண்டபத்தில் திருமணக் கோலத்தில் எழுந்தருளினா்.
இதைத்தொடா்ந்து, இறைவனின் சாபத்தால் பூமியில் மீனவப் பெண்ணாகப் பிறப்பெடுத்த மீனாட்சி அம்மனை, மீனவராகப் பிறப்பெடுத்து கடலில் திமிங்கிலத்தைக் கொன்று, அம்மனை மணம் முடிக்கும் மச்சஹந்தி விவாகம் நடைபெற்றது.
இதில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரா் சுவாமி சாா்பில் பட்டா்கள் மாலை மாற்றிக் கொண்டு விவாகம் புரிந்தனா். இதைத் தொடா்ந்து அம்மன், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-07/84nalwz0/4634mdu07samy1_0702chn_2.jpg)