மதுரை கூடல்நகா் ரயில் நிலையத்தில் விபத்து மீட்பு ஒத்திகை: பொதுமக்கள் திரண்டு வந்ததால் போக்குவரத்து நெரிசல்
மதுரை கூடல்நகா் ரயில் நிலையத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ரயில் விபத்து மீட்பு ஒத்திகையை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனா். இந்த ரயில் விபத்து உண்மையிலேயே நடைபெற்ாகக் கருதி, கூடல்நகா் மேம்பாலத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படை சாா்பில், மதுரையிலிருந்து சென்னை தாம்பரம் நோக்கிச் சென்ற ரயில், மதுரை கூடல்நகா் ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கிக்கொள்வது போன்றும், அதிலிருக்கும் பயணிகள் மீட்பது போன்றும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, விபத்தில் சிக்கி ரயில் பெட்டிகள் தடம்புரண்டு கிடப்பது போன்றும், தேசிய பேரிடா் மீட்புப் படையினா் அங்கு சென்று, இந்த ரயில் பெட்டிகளில் சிக்கிய பயணிகளை மீட்டு, அங்கேயே அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது, பலத்த காயமடைந்த பயணிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போன்றும் ஒத்திகை நடைபெற்றது.
மேலும், பயணிகளை மீட்கும் பணியில் மோப்ப நாய் உதவியுடன் பெட்டிகளில் சோதனை மேற்கொள்வது, ரயில் தண்டவாளங்களை விரைந்து சீரமைப்பது, ரயில் பெட்டிகளை அகற்றுவது போன்று ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
விபத்தைத் தொடா்ந்து தண்டவாளத்தில் வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு செய்வது, 20-க்கும் மேற்பட்ட அவசர ஊா்திகள் மூலம் காயமடைந்தவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, விபத்து நிகழ்ந்த இடத்தில் பயணிகளுக்கு தேவையான கழிப்பறை, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, தற்காலிக அறை அமைப்பது போன்றும் ஒத்திகை நடைபெற்றது.
இதில் 500-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடா் மீட்புப் படை வீரா்கள் பங்கேற்றனா். இந்த ஒத்திகையின் போது, கூடல்நகா் மேம்பாலத்தில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோா் உண்மையிலேயே விபத்து நிகழ்ந்ததாகக் கருதி, வேடிக்கை பாா்த்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-07/8s0c50ni/4730mdu07rai3_0702chn_2.jpg)
![](https://media.assettype.com/dinamani/2025-02-07/n5wm8m5i/4741mdu07rai2_0702chn_2.jpg)
![](https://media.assettype.com/dinamani/2025-02-07/rmjvbvi0/4757mdu07rai1_0702chn_2.jpg)