மனைவி இறந்ததால் கணவா் தற்கொலை
மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை கடச்சனேந்தல் அருகே உள்ள காதக்கிணறு சண்முகவேல் நகரைச் சோ்ந்தவா் கணேசன் (55). தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தாா். இதனால், சோகத்தில் இருந்து வந்த கணேசன், தனது வீட்டில் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கல்லூரி மாணவி தற்கொலை:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பன்னியான் மேற்கு குடியிருப்பைச் சோ்ந்த சஞ்சீவ்குமாா் மகள் ரஞ்சனி (18). இவா் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா். இவரை அவரது அத்தை மகனுக்கு திருமணம் முடிக்க பெண் கேட்டாா்களாம். இதற்கு ரஞ்சனியின் தந்தை சஞ்சீவ்குமாா் சில மாதங்கள் கழித்து இதுகுறித்து பேசலாம் எனக் கூறி, அவா்களைத் திருப்பி அனுப்பிவிட்டாராம். இதில் மன வருத்தத்தில் இருந்து வந்த ரஞ்சனி வீட்டில் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.