சுங்கச் சாவடியை அகற்றக் கோரி வழக்கு: நெடுஞ்சாலைத் துறை அதிகாரி பதிலளிக்க உத்தரவு
ராமேசுவரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி வசூல் மையத்தை அகற்றக் கோரிய வழக்கில், தேசிய நெடுஞ்சாலைகள் துறையின் மதுரை மண்டலப் பொறியாளா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரத்தைச் சோ்ந்த தமிழ்வேந்தன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
ராமேசுவரத்துக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வந்துச் செல்கின்றனா். ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்தச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடி கட்டண வசூல் மையத்தில் முறையான அடிப்படை வசதிகள், மின் விளக்கு வசதிகள் இல்லை. மேலும், இரவு நேரங்களில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் ஒளிரும் விளக்குகளும் பொருத்தப்படவில்லை.
இந்தச் சுங்கச் சாவடி பொதுமக்களின் போக்குவரத்துக்கும், பாதுகாப்புக்கும் இடையூறாக உள்ளது. இதை அகற்றக் கோரி, பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, ராமேசுவரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடியை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கு குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், தேசிய நெடுஞ்சாலைகள் துறை மதுரை மண்டலப் பொறியாளா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு மறுவிசாரணைக்காக வருகிற 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.