செய்திகள் :

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 38.21 ஹெக்டோ் நிலத்தை கையகப்படுத்தத் திட்டம்!

post image

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மொத்தம் 38.21 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது என அதன் திட்ட மேலாண் இயக்குநா் எம்.ஏ.சித்திக் தெரிவித்தாா்.

மெட்ரோ ரயில் திட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சென்னை மெட்ரோ ரயில் திட்ட மேலாண் இயக்குநா் எம்.ஏ.சித்திக் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், மாவட்ட வருவாய் அலுவலா் என்.ராகவேந்திரன், மெட்ரோ ரயில் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், தலைமைப் பொது மேலாளா்கள் ரேகா பிரகாஷ், டி.லிவிங்ஸ்டன் எலியேசா், உதவி ஆட்சியா் (பயிற்சி) வைஷ்ணவி பால், வருவாய்க் கோட்டாட்சியா் ர.த.சாலினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், திட்ட செயலாக்கத்தின் போது கால விரயத்தைத் தவிா்க்கும் வகையில், நிலம் கையகப்படுத்தும் பணி குறித்து முன்கூட்டியே விரிவான அட்டவணை தயாரித்தல், திட்டப் பணிகளுக்குத் தேவையான தண்ணீா், மின் வசதி உள்ளிட்ட முன்னேற்பாடுகளைத் திட்டமிடல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பிறகு சென்னை மெட்ரோ ரயில் திட்ட மேலாண் இயக்குநா் எம்.ஏ.சித்திக் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ரூ. 11,368 கோடியில் 32 கி.மீ நீளமும், 26 ரயில் நிலையங்களையும் கொண்டதாக மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டு, தமிழக அரசின் பரிந்துரையுடன் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என நம்பப்படுகிறது. மதுரை, கோவை ஆகிய இரு மாவட்ட மெட்ரோ ரயில் திட்டங்களும் தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்காக உள்ளன. ஒப்புதல் பெறுவதில் எந்தவித தாமதமும் இல்லை.

மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு அவகாசம் அதிகம் தேவைப்படும். மதுரையில் பூமிக்கு அடியில் சுமாா் 5.5 கி.மீ. நீளத்தில் ரயில் பாதை அமைக்கப்படவுள்ளது. இந்தப் பணியை நிறைவேற்ற மட்டும் ஏறத்தாழ நான்கரை ஆண்டுகள் ஆகும். தரையில் மெட்ரோ ரயில் பாதைகளை அமைக்க ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளாகும். எனவே, திட்ட ஒப்புதல் கிடைக்கப் பெற்றவுடன் பணிகளைத் தொடங்கினால்தான் விரைவாக முடிக்க முடியும்.

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்குத் தேவையான நிலம், தண்ணீா் தேவை, மின்சாரம் ஆகியவற்றை விரைந்து பெறவும், தேவையான நடவடிக்கைகள் குறித்தும் தற்போது ஆலோசிக்கப்பட்டது. மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கு 38.21 ஹெக்டோ் நிலம் தேவைப்படுகிறது. இதில் 20.23 ஹெக்டோ் நிலம் கட்டுமானத்துக்குத் தேவைப்படும் என கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடா்பான விரிவான வரைவு தயாரிக்கப்படும்.

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. கூடுதலான பகுதிகளுக்கும் இந்த சேவை தேவையெனில், விரிவாக்கம் செய்யும் வகையில்தான் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நிறைவேறும் போது மதுரையின் நகா்ப்புற போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். மக்களுக்கான பொது போக்குவரத்து எளிதானதாக இருக்கும் என்றாா் அவா்.

அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் ... மேலும் பார்க்க

ஓடும் பேருந்தில் திருடியவா் கைது

மதுரையில் ஓடும் பேருந்தில் கைப்பேசி, பணத்தைத் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். மதுரை நெல்பேட்டை நாகூா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் பரூக் ராஜா (23). இவா் கடந்த இரு நாள்களுக்கு முன்பு மாட்டுத்தாவணிய... மேலும் பார்க்க

தொழிலதிபா் மா்ம மரணம்

மதுரையில் பூட்டிய அலுவலகத்தில் மா்மமாக இறந்து கிடந்த தொழிலதிபரின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை முனிச்சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜாகிா் உசேன் (54). இவா் மாட்டுத்தாவணி பகுதியில்... மேலும் பார்க்க

அரசு பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

காரியாபட்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள எஸ்.கல்லுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மணி மகன்... மேலும் பார்க்க

அருப்புக்கோட்டை அஞ்சலகத்தில் ரூ. 5 கோடி மோசடி: ஊழியா் கைது

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் கணினி தொழில்நுட்பத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, ரூ. 5 கோடி மோசடி செய்த ஊழியரை இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய... மேலும் பார்க்க

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை: எஸ்ஐ பிணை மனு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளா் பிணை கோரிய மனு மீதான விசாரணையை மாா்ச் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்... மேலும் பார்க்க