140 கோடி இந்தியர்களின் முயற்சியில் டிஜிட்டல் இந்தியா முன்னேற்றம்: பிரதமர்
மது போதையில் வேட்டை; தவறிய இலக்கு — கோவை பழங்குடி இளைஞர் சுட்டு கொலை; 2 பேர் கைது
கோவை மாவட்டம், காரமடை, அத்திக்கடவு அருகே உள்ள சுரண்டை என்கிற பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சித். இவர் தன் கிராமத்தைச் சேர்ந்த பாப்பையன் மற்றும் முருகேஷ் ஆகியோருடன் இரவு நேரத்தில் காட்டுக்கு வேட்டையாட சென்றுள்ளார்.

வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக கையில் ஒரு நாட்டு துப்பாக்கி எடுத்து சென்றுள்ளனர். பாப்பையா கையில் துப்பாக்கி இருந்துள்ளது. அவர் அங்குள்ள ஒரு இலக்கை நோக்கி சுட்டுள்ளார்.
அப்போது சஞ்சித் திடீரென குறுக்கே வந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரின் உடலில் அடுத்தடுத்து நான்கு குண்டுகள் பாய்ந்துள்ளது. சஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இதுதொடர்பாக முருகேஷ் சஞ்சிவீன் குடும்பத்துக்கு அழைத்து தகவல் சொல்லியுள்ளார்.


சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சஞ்சித்தின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். பாப்பையா மற்றும் முருகேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் தலைமறைவாகியிருந்தனர்.
காவல்துறை சிறப்புப் படை அமைத்து அவர்களை தேடி வந்த நிலையில், நேற்று பாப்பையா மற்றும் முருகேஷ் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தின் போது அவர்கள் 3 பேருமே மது போதையில் இருந்தது தெரிய வந்தது.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வனத்துறையினர் வனப்பகுதி மற்றும் அதன் எல்லைகளில் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.