இன்டர் மிலன், மான்செஸ்டர் சிட்டி தோல்வி: ரசிகர்கள் அதிர்ச்சி!
கடலூர்: மகனின் கடனுக்காக அப்பாவைக் கடத்திய கந்துவட்டிக் கும்பல்; கை விரலைத் துண்டித்த கொடூரம்
கடலூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரை நேற்று தொடர்பு கொண்ட மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின், தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திக் கொண்டு கடலூரை நோக்கி வருவதாகத் தெரிவித்தார்.
அதையடுத்து எஸ்.பி ஜெயக்குமார் கடலூர் முதுநகர் காவல் நிலைய போலீஸாரை, உடனடியாக வாகன சோதனையில் களமிறக்கினார்.
குடிகாடு பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மயிலாடுதுறை எஸ்.பி ஸ்டாலின் கூறிய அடையாளத்துடன் வந்த காரை மடக்கினர். அதில் 5 பேர் இருந்த நிலையில், கடத்தப்பட்ட முதியவர் இல்லை.

அதையடுத்து அந்த 5 பேரையும் விசாரித்தபோது, `எங்களிடம் வாங்கிய கடனைக் கொடுக்காததால் நடராஜன் என்பவரைக் கடத்தினோம். அவரை அடித்து, கை விரலைத் துண்டித்து குடிகாடு பகுதியில் இறக்கிவிட்டுவிட்டோம்’ என்று கூறியிருக்கின்றனர்.
அதையடுத்து முதியவர் நடராஜனை மீட்ட போலீஸார், உடனே அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அதேபோல கைது செய்யப்பட்ட 5 பேர் கொண்ட கந்துவட்டிக் கும்பலை, மயிலாடுதுறை போலீஸாரிடம் ஒப்படைத்தனர் கடலூர் போலீஸார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கடலூர் போலீஸார், ``கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த 71 வயது நடராஜன், தற்போது மயிலாடுதுறை திருவிழந்தூர் மேல ஆராயாத் தெருவில் வசித்து வருகிறார்.
இவரின் மகனான மணிகண்டன் சிதம்பரத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவரிடம், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ரூ.15 லட்சம் கந்து வட்டிக்குக் கடன் வாங்கியிருக்கிறார். அதில் 10 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்ட நிலையில், மீதித் தொகை ரூ.5 லட்சத்தைத் தருவதற்கு மேலும் தவணை கேட்டிருக்கிறார். அதை ஏற்காத பழனிசாமி, ரூ.5 லட்சத்தையும் தர வேண்டும் என்று கறார் காட்டியிருக்கிறார்.

மணிகண்டனால் உடனடியாக அந்தப் பணத்தைத் திருப்பி செலுத்த முடியவில்லை. அதில் கடுப்பான பழனிசாமி உள்ளிட்ட 5 பேர், முதியவர் நடராஜனை நேற்று காரில் கடத்தியிருக்கின்றனர். அந்தக் கடத்தல் செய்தி மணிகண்டனுக்குத் தெரிய வர, உடனே மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர்.
அதனடிப்படையில் பழனிசாமி உள்ளிட்ட அடையாளம் தெரியாத 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்த மயிலாடுதுறை போலீஸார், எங்கள் எஸ்.பி-க்குத் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில்தான் சக்திவேல், பாண்டியன், பன்னீர்செல்வம், மரிய செல்வராஜ், தேவநாதன் உள்ளிட்டவர்களைக் கைது செய்தோம்” என்றனர்.