சிலைகளுடன் விளையாடும் மெஸ்ஸி..! இன்டர் மியாமியை விமர்சிக்கும் இப்ராஹிமோவிச்!
பள்ளி மாணவன் உட்பட 2 பேர் கொலை... இரவில் நடுங்கிய திருவண்ணாமலை; பின்னணி என்ன?
திருவண்ணாமலை, வேடியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராம் (வயது 37). நேற்று இரவு காந்தி நகர் மைதானம் அருகில் ராம் இருந்தபோது, அங்கு வந்த 6 பேர்கொண்ட கும்பல், ராமுவைச் சூழ்ந்துகொண்டு கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் நிலைகுலைந்து விழுந்த ராம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இதையடுத்து, தாக்குதல் நடத்திய கும்பலும் அங்கிருந்து ஓடிவிட்டது.

இது குறித்துத் தகவலறிந்து சென்ற திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையப் போலீஸார், ஆட்டோ ஓட்டுநர் ராமுவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 6 பேரையும் விரைந்து பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக, ராம் கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல் வந்திருக்கின்றன.
இதேபோல், திருவண்ணாமலை தாமரை நகர்ப் பகுதியிலும் பதினோராம் வகுப்புப் பயின்று வந்த கோகுல் (எ) சுனில் என்ற 16 வயது பள்ளி மாணவன் நேற்று இரவு குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இது தொடர்பாக, ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த கோட்டை முத்து என்பவரை நேற்று இரவே திருவண்ணாமலை நகரக் காவல் நிலையப் போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், கமுதியைச் சேர்ந்த கோட்டை முத்துவுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் இளம்பெண்ணை மிரட்டி கோட்டை முத்து பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில், இளம்பெண்ணைத் தேடிக்கொண்டு நேற்று இரவு திருவண்ணாமலைக்கு வந்திருக்கிறார் கோட்டை முத்து.
அப்போது, இளம்பெண்ணுக்கு ஆதரவாகப் பதினோராம் வகுப்பு மாணவன் உட்பட 3 பேர் சென்று கோட்டை முத்துவிடம் தகராறில் ஈடுபட்டதாகவும், இந்த மோதலில் கோட்டை முத்து மறைத்து எடுத்துவந்த கத்தியை எடுத்துக் குத்தியதில் மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
ஆனாலும், இந்த 2 கொலை சம்பவங்கள் குறித்து போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.