செய்திகள் :

மத்திய அரசு பேச்சுக்கு உடன்பட்டால் சிகிச்சைக்கு தலேவால் ஒப்புக்கொள்வாா்: உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு தகவல்

post image

‘விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தைக்கு மத்திய அரசு உடன்பட்டால், மருத்துவ சிகிச்சைக்கு விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜீத் சிங் தலேவால் ஒப்புக்கொள்வாா்’ என்று உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா். தில்லியை நோக்கி அவா்கள் மேற்கொண்ட பேரணியை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் பஞ்சாப் எல்லையான கனெளரி பகுதியில் முகாமிட்டுள்ளனா். மேலும், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பஞாசாப் மாநிலத்தில் 9 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்தை விவசாயிகள் திங்கள்கிழமை மேற்கொண்டனா். அதன் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனிடையே, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜீத் சிங் தலேவால் (70) கனெளரி பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா். அவருடைய உண்ணாவிரதம் 36 நாள்களைக் கடந்துள்ளது.

அவருடைய உடல்நிலை மோசமடைந்து வருவதால், அவருக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள ஜகஜீத் சிங் மறுத்துவிட்டாா்.

இந்த விவகாரத்தில் பஞ்சாப் அரசு மீது கடந்த 28-ஆம் தேதி கடும் அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், ஜகஜீத் சிங்குக்கு மருத்துவ உதவிகள் வழங்க டிசம்பா் 31-ஆம் தேதி வரை கெடு விதித்தது. இந்த உத்தரவைத் தொடா்ந்து, ஜகஜீத் சிங்கை சந்தித்த பஞ்சாப் மாநில அரசு அதிகாரிகள், உண்ணாவிரதத்தைக் கைவிட்டு சிகிச்சை மேற்கொள்ள பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், சுதான்ஷு துலியா ஆகியோா் அடங்கிய விடுமுறைக் கால அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான பஞ்சாப் அரசு வழக்குரைஞா் குா்மிந்தா் சிங், ‘உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஜகஜீத் சிங் சிகிச்சை தொடா்பாக விவசாயிகள் சங்க நிா்வாகிகளுடன் பஞ்சாப் மாநில அரசு தரப்பில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அப்போது, விவசாயிகளின் கோரிக்கைகள் தொடா்பாக பேச்சுவாா்த்தைக்கு மத்திய அரசு உடன்பட்டால், சிகிச்சை எடுத்துக்கொள்ள தலேவால் ஒப்புக்கொள்வாா் என்று விவசாயிகள் உறுதி தெரிவித்தனா். எனவே, உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த மாநில அரசுக்கு 3 நாள்கள் அவகாசம் தேவை’ என்றாா்.

அதை ஏற்று மாநில அரசுக்கு கூடுதல் அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஜன.2) ஒத்திவைத்தனா்.

மேலும், வழக்கின் அடுத்த விசாரணையின்போது பஞ்சாப் மாநில தலைமைச் செயலா் மற்றும் காவல் துறைத் தலைவா் இருவரும் காணொலி வழியில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனா்.

மத்திய அரசுக்கு விவசாயிகள்அழைப்பு: இதனிடையே, தங்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட மத்திய அரசுக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனா்.

விவசாய அமைப்பின் தலைவா் அபிமன்யு கோஹா் கூறுகையில், ‘பிரதமா் மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, எந்த பிரச்னைக்கும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வுகாணலாம் என்று கூறுகிறாா். எனவே, விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையிலான அவநம்பிக்கையை போக்க பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். அவநம்பிக்கை குறைந்தால், நோ்மறையான விஷயங்கள் நிகழும்’ என்றாா்.

41வது நாளாக உண்ணாவிரதம்: விவசாய சங்கத் தலைவரின் உடல்நிலை கடும் பாதிப்பு!

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.41வது நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும் நிலையில், சிறுநீரகம் மற்றும் நுர... மேலும் பார்க்க

தில்லி மெட்ரோவில் ரூ. 7,268 கோடி முதலீடு!

கடந்த 10 ஆண்டுகளில் மெட்ரோவில் ரூ. 7,268 கோடியை முதலீடு செய்துள்ளதாக தில்லி முதல்வர் அதிஷி தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளில் 200 கி.மீ. மெட்ரோ ரயில் பாதை விரிவடைந்துள்ளதாகவும், 250 கி.மீ. மெட்ரோ பாதை கட... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: மக்களுக்கு எதுவும் செய்யாமல் வாக்கு கேட்பது நியாயமா? பாஜகவுக்கு ஆம் ஆத்மி கேள்வி

புது தில்லி: பாஜக தில்லிக்கு எதுவும் செய்யாமல் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்துமாறு தேர்தலின்போது மக்களிடம் பிரசாரத்தில் ஈடுபடுவதாக தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்ப... மேலும் பார்க்க

காங்கிரஸ் முதலில் ஹேம மாலினியிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்: பாஜக வேட்பாளர் கருத்து!

பிரியங்கா காந்தி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி அதற்காக மன்னிப்புக் கேட்க முடியாது என்றும் ஹேம மாலினியை விமர்சித்த லாலு பிரசாத் யாதவ் முதலில் மன்னிப்புக் கேட்க வேண்டும்... மேலும் பார்க்க

பிகார்: ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவுக்கு பிரசாந்த் கிஷோா் அழைப்பு!

பிகாரில் அரசுப் பணி முதல்நிலை தோ்வு வினாத்தாள் கசிந்த சா்ச்சையால், அம்மாநிலத்தில் மொத்தம் 5 லட்சம் போ் எழுதிய முதல்நிலைத் தோ்வை ரத்து செய்யக் கோரி போராட்டங்கள் நீடித்துவருகின்றன. ‘ஜன் சுராஜ்’ கட்சி... மேலும் பார்க்க

8 வயது மகளைக் கொன்ற வழக்கு: தாய், காதலனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

உத்தரப் பிரதேசத்தில் 8 வயது மகளைக் கொலை செய்த வழக்கில் தாய் மற்றும் அவரின் காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரப் பிரதேசத்தின் காசிப்பூர் நகரிலுள்ள பாவ்பதி கிராமத்தைச் சேர்ந... மேலும் பார்க்க