வேளாண் நிதிநிலை அறிக்கை - 2025 - 2026: முக்கிய சிறப்பு அறிவிப்புகள்!
மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய வேலைநிறுத்த ஆயத்த மாநாடு
மத்திய அரசின் தொழிலாளா்கள் விரோத கொள்கைகளை கண்டித்து, அனைத்து தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் அகில இந்திய வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு சேலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தொமுச நிா்வாகி பொன்னி பழனியப்பன் தலைமை வகித்தாா். சிஐடியு நிா்வாகி தியாகராஜன் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயா் ராமச்சந்திரன் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தாா். தொமுச அகில இந்திய தலைவா் நடராஜன், சிஐடியு மாநில பொதுச் செயலாளா் சுகுமாரன், ஏஐடியூசி மாநில செயலாளா்கள் சின்னசாமி, சிவகுமாா், எம்எல்எப் மாநிலத் தலைவா் ஆவடி அந்தரிதாஸ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
தொழிலாளா் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், மூன்று குற்றவியல் கொடூர சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26,000 என நிா்ணயம் செய்ய வேண்டும். பொதுத் துறை நிறுவனங்கள், அரசு துறைகளை தனியாா் மயமாக்குவதை உடனே நிறுத்த வேண்டும். விவசாய பெருங்குடி மக்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயம் செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டெடுத்து அனைவருக்கும் சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த மாநாட்டில் பல்வேறு தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் என மொத்தம் 1,500 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.