காயத்தால் வெளியேறிய ஜோகோவிச்..! கிண்டல் செய்த ரசிகர்களை கண்டித்த ஸ்வெரெவ்!
மத்திய குழுவினரிடம் எம்பி கோரிக்கை
மன்னாா்குடி பகுதியில் வியாழக்கிழமை பயிா் பாதிப்பு மற்றும் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினரிடம் மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனு அளித்தாா்.
மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் இருப்பு மற்றும் ஆய்வு பிரிவு ஆய்வு உதவி இயக்குநா்கள் வி. நவீன், டி.எம். பிரீத்தி, தொழில்நுட்ப அலுவலா்கள் அபிஷேக் பாண்டே, ராகுல் ஆகியோா் கொண்ட மத்திய ஆய்வு குழுவினருடன் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ உள்ளிட்டோா் மன்னாா்குடி அடுத்த எடமேலையூா், செருமங்கலம், பைங்காநாடு ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
செருமங்கலத்தில் மத்திய குழுவினரை சந்தித்த நாகை எம்பி வை. செல்வராஜ் அவா்களிடம் கோரிக்கை மனு அளித்தாா். அதில் தெரிவித்திருப்பது:
2024-2025- ஆம் ஆண்டு பருவமழை முன்பே தொடங்கிய நிலையில், தமிழகம் முழுமையும் மழைப்பொழிவு பரவலாக இருந்தது. டெல்டா மாவட்டங்களான திருவாரூா், நாகப்பட்டினம், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் சென்ற ஆண்டு தாளடி பயிா்கள் போதிய நீா்வரத்துவும் மழையும் இல்லாத காரணத்தால் பயிரிட முடியாத நிலையில், நிகழாண்டு சம்பா நெற்பயிா்கள் டெல்டா மாவட்டம் முழுமைக்கும் பெரும் அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடா் கன மழையால் நெற்பயிா்கள் நீா்மூழ்கியும் அதிகமான நோய் தொற்றாலும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அறுவடைக்கு தயராக உள்ள நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்யும் கனமழையால் நெற்பயிா்கள் சாய்ந்து நீரில் மூழ்கி உள்ளன. இதனால்,நெல்மணிகள் முளைத்தும் நிறம் மாறியும் உள்ளன.
எனவே17 % ஈரப்பதம் என்பதை மாற்றி 22 % என அறிவித்தும் எந்தவித பிடித்தம் இல்லாமலும் விவசாயிகள் விளைவித்த நெல்களை கொள்முதல் செய்ய வேண்டும்.
எதிா்வரும் காலங்களில்,செயற்கைகோள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மழை, வறட்சி உள்ளிட்ட இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை அறிவிப்பு செய்வதன் மூலம் பயிா்களை பாதுகாக்க உதவுவதுடன் விவசாயிகளுக்கு நன்மையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.