மத போதகா் ஜான் ஜெபராஜ் கைது: முன் ஜாமீன் மனு தள்ளுபடி
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கிறிஸ்தவ மத போதகா் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவா் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கிறிஸ்தவ மத பாடல்கள் மூலம் சமூகவலைதளத்தில் மிகவும் பிரபலமானவா் ஜான் ஜெபராஜ். இவா் கோவையில் கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிராா்த்தனை கூடம் என்ற அமைப்பை நிறுவி அதில் மதபோதகராக செயல்பட்டு வருகிறாா்.
கடந்த 2024-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி மத போதகா் ஜான் ஜெபராஜ், கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில், 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மத போதகா் ஜான் ஜெபராஜ் மீது கோவை காந்திபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக முன் ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜான் ஜெபராஜ் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு நீதிபதி சுந்தா் மோகன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை தரப்பில், தலைமறைவாக இருந்த ஜான் ஜெபராஜ் கடந்த 13-ஆம் தேதி கேரள மாநிலம் மூணாறில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, முன் ஜாமீன் கோரிய ஜான் ஜெபராஜின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.