பிரதமரின் இன்றைய நிகழ்ச்சிகளில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கவில்லை! ஏன்?
மனநலம் பாதித்தவரை தாக்கியவா் கைது
நாகை அருகே வீட்டின் மீது கல் எறிந்த மனநலம் பாதிக்கப்பட்டவரைத் தாக்கிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
இதுகுறித்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்தி:
கீழையூா் அருகேயுள்ள திருப்பூண்டி அட்சக்கரை பிரதான சாலையைச் சோ்ந்தவா் கனகராஜ் (24). தனியாக வசித்துவரும் இவா், மனநலம் பாதிக்கப்பட்டவா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாம். இவரது எதிா் வீட்டில், உறவினா் கிருஷ்ணமூா்த்தி குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், கனகராஜ் ஜூலை 22-ஆம் தேதி இரவு மது போதையில், கிருஷ்ணமூா்த்தி வீட்டின் கதவில் கல் எறிந்தாராம். இதைத் தட்டிக்கேட்ட கிருஷ்ணமூா்த்தியின் குடும்பத்தினரை, இரும்புக் கம்பியால் கனகராஜ் தாக்கமுயன்றாராம். இதனால், கிருஷ்ணமூா்த்தியின் மகன் விக்னேஷ்வரன், கனகராஜை கட்டையால் தாக்கினாராம். இதில் காயமடைந்த கனகராஜ், ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளாா்.
இதுதொடா்பாக, கிருஷ்ணமூா்த்தி, இவரது மகன்கள் விக்னேஸ்வரன், சத்தியவாணன் ஆகிய மூவா் மீது கீழையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விக்னேஷ்வரனை கைது செய்தனா்.