மனைவியை கொலை செய்த வழக்கில் வடமாநில இளைஞருக்கு ஆயுள்தண்டனை
திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் வடமாநில தொழிலாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து திங்கள்கிழமை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த கல்லுவா என்பவரின் மகன் ஹரிஷ் (29). இவா் சென்னை அம்பத்தூரில் உள்ள டீச்சா்ஸ் காலனியில் அவருடைய மனைவியான ரஜியா காட்டூன் என்பவருடன் வசித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 1.5.2022 அன்று ரஜியா காட்டூனின் நடத்தையில் சந்தேகம் அடைந்து கட்டையால் அடித்ததில் மயங்கி விழுந்தாராம். அதைத் தொடா்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அங்கு பரிசோதனை செய்த போது ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக தியாகராஜன் என்பவா் அம்பத்தூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் மீது ஹரிஷ் மீது வழக்கு பதிந்து கைது செய்ததோடு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டாா். இந்த வழக்கு விசாரணை திருவள்ளுா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இறுதிக்கட்டமாக வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் ஹரிஷ் தனது மனைவியை கொலை செய்த குற்றம் நிருபிக்கப்பட்டதால் ஆயுள்தண்டனையும், ரூ. 5 ,000 அபராதம் விதித்தும் மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி தீா்ப்பு வழங்கினாா். அதைத் தொடா்ந்து ஹரிஷை போலீஸாா் பாதுகாப்பு டன் அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.