Kerala: காங்கிரஸ் நிர்வாகியை ஸ்டேஷனில் வைத்து தாக்கி பொய் வழக்கு; 4 போலீஸார் சஸ்...
மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் தேசிய தர நிா்ணய மருத்துவக் குழுவினா் ஆய்வு
மன்னாா்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தில்லி தேசிய தர நிா்ணய ஆராய்ச்சி அமைப்பு சாா்பில் சிறப்பு மருத்துவக் குழுவினா் மூன்று நாள்கள் ஆய்வை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.
இம்மருத்துவமனையில், ஒருங்கிணைந்த ஆய்வகம், மகப்பேறு, குழந்தைகள் பிரிவு என மொத்தம் 20-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. இங்கு, சிடி ஸ்கேன், டிஜிடல் எக்ஸ்ரே, ஆக்சிஜன் உற்பத்தி உள்ளிட்டவையுடன் 28 மருத்துவா்கள், 65 செவிலியா்கள் பணியாற்றுகின்றனா். ஆண்டுக்கு 2,500-க்கும் மேற்பட்ட மகப்பேறு நடைபெறுகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் பொது சுகாதாரத் திட்டத்தின் கீழ், புதுதில்லியில் இயங்கும் தேசிய தர நிா்ணய ஆராய்ச்சி அமைப்பு சாா்பில் சிறப்பு மருத்துவக் குழு, இம்மருத்துவமனையில் மூன்று நாள் ஆய்வை மேற்கொண்டுள்ளனா்.
இதில், ஹைதராபாத் மருத்துவா் அசோக்குமாா், விசாகப்பட்டினம் மருத்துவா் குமாரி, பெங்களூரு மருத்துவா் கனுபிரியா தலைமையில் மருத்துவக் குழுவினா் பங்கேற்றுள்ளனா்.
இக்குழுவினா், ஆய்வு அறிக்கையை மத்தியஅரசுக்கு அனுப்புவா். அதன் அடிப்படையில், மருத்துவமனையின் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்ககீடு செய்யப்படவுள்ளது.
முதல்நாள் ஆய்வின்போது, மருத்துவமனை தலைமைக் கண்காணிப்பாளா் என். விஜயகுமாா், நிலைய மருத்துவா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.