இலங்கைத் தமிழா்களுக்கு ரூ.6.20 கோடியில் வீடுகள்: பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு
மரக்காணம்: `வருசத்துக்கு ஒரு போகம்தான் அறுவடை; அதுக்கும் புயலால பாதிப்பு' - விவசாயிகள் குமுறல்!
ஃபெஞ்சல் சேதம் உயிர் சேதம், கட்டட சேதம் எவ்வளவு ஏற்படுத்தியிருக்கிறதோ, அதே அளவு பயிர் சேதமும் ஏற்படுத்தியிருக்கிறது. ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த மரக்காணம் பகுதியில் ஏற்பட்டிருக்கும் பயிர் சேதம் மற்றும் அந்தப் பகுதி விவசாயிகளின் கோரிக்கை பற்றி நம்மிடம் பகிர்கிறார் மரக்காணத்தை சேர்ந்த விவசாயி நா.சீத்தாராமன்.
'மரக்காணத்துல கிட்டத்தட்ட 16,400 ஏக்கர் வேளாண் பயிர்கள், 8,000 ஏக்கர் தோட்ட பயிர்கள், 500 ஏக்கர் சவுக்கு பயிர்கள்னு மொத்தம் 24,900 ஏக்கர் பயிர்களுக்கு இப்ப பேஞ்ச மழைனால பலத்த சேதம். முக்கியமா, பங்கிம்காம் கால்வாய் மற்றும் கடல் ஒட்டி இருக்கற நெல் வயல்கள் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கு.
நேத்து முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பாதிப்புகளை பார்வையிட வந்தாங்க. இன்னைக்கு அண்ணாமலை ஸ்பாட்ல இருக்காரு.
நேத்து சாயந்திரம் துறை அதிகாரிகள் வந்து பாதிக்கப்பட்ட இடங்களை ட்ரோன் மூலம் பாத்தாங்க. அப்புறம் வெள்ள நிவாரண விண்ணப்பத்தை விவசாயிங்க கிட்ட கொடுத்து ரெண்டு நாள்ல தர சொல்லியிருக்காங்க. இது எல்லாம் வேளாண் பயிர் மற்றும் தோட்டப் பயிர் விவசாயிகளுக்கு. ஆனா, சவுக்கு பயிர் போட்டவங்களுக்கு தான் குழப்பமா இருக்கு. சவுக்கு பயிர் தோட்டத்துறை, வனத்துறை, வேளாண் துறை எதுலயும் சேராது. அதனால, இந்தப் பாதிப்புகளுக்கு யார்கிட்ட மனு கொடுக்கறதுனு அந்த விவசாயிகளுக்கு தெரியாம திண்டாடிகிட்டு இருக்காங்க.
நாங்க ஏற்கெனவே சவுக்கு நாத்தை மானிய விலையில வனத்துறை மூலமா கொடுக்கணும்னு பல முறை கோரிக்கை வெச்சிருக்கோம். அதுமாதிரி இந்த சேதத்துக்கும் வனத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு, நிவாரணம் வாங்கி தந்தாங்கனா விவசாயிகளுக்கு பெரிய உதவியா இருக்கும்.
பெரும்பாலும் மரக்காணம் பகுதி நெல் விவசாயிகள் ஒரு போகம் விவசாயம் தான் செய்வாங்க. இவங்க பெரும்பாலும் பாசனத்துக்கு ஆறு, ஏரியை தான் நம்பி இருப்பாங்க. வருசத்துக்கு ஒருமுறை வெக்கற பயிரும் இப்படி மழைல பாதிக்கப்பட்டதால அவங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. இதுல வர்ற வருமானத்தை வெச்சு தான் அடுத்த போகம் வரை ஓட்டணும்ங்கற நம்பிக்கைல இருந்துருப்பாங்க. ஆனா, அதுக்கெல்லாம் சரியான அடி.
போன ஜனவரி மாசம் பேஞ்ச பருவம் தவறிய மழையால கூட நல்ல சேதம். அதுக்கும் இப்போ வரை எந்த நஷ்ட ஈடும் வரல. அதை விட, மொத்த விழுப்புரம் மாவட்டத்துல பாக்கும்போதும் தொடர்ந்து மூணு வருஷமா பயிர் காப்பீடு எதுவும் வரல. அதனால, விவசாயிகள் யாரும் இந்த வருசம் பயிர் காப்பீடு போடல. இதுவும் இந்த சேதத்துல அவங்களுக்கு பெரிய அடியா இருக்கும்.
இப்போதைக்கு எங்களோட முக்கிய கோரிக்கை சரியாக வெள்ள நிவாரணம் வந்து சேர்றது தான். காப்பீடு விஷயத்துல என்ன பிரச்னைனு எங்களுக்கு தெரியல. அதுவும் இப்போ கிடைச்சா விவசாயிகளுக்கு ரொம்ப உதவியா இருக்கும்" என்று கூறுகிறார்.