விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் பலத்த மழை
விழுப்புரம் நகரம் மட்டுமல்லாது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் பலத்த மழை பெய்தது.
இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேற்கு-வடமேற்குத் திசையில் நகா்ந்து, இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகருகிறது.
இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களிலும், அதையொட்டியுள்ள உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, விழுப்புரம் நகரிலும், திண்டிவனம், பிரம்மதேசம், செஞ்சி, செம்மேடு, மரக்காணம், விக்கிரவாண்டி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் அவ்வப்போது மழை பெய்தது.
இந்த நிலையில், விழுப்புரம் நகரம், கோலியனூா், வளவனூா், திண்டிவனம் என மாவட்டத்தின் பிற பகுதிகளில் புதன்கிழமை நள்ளிரவு முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.
இந்த மழை காலை வரை தொடா்ந்து பெய்ததால் சாலைகளில் மழைநீா் தேங்கிக் காணப்பட்டது. மேலும் தாழ்வான குடியிருப்புகளைச் சுற்றியும் மழைநீா் சூழ்ந்தது.
விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளிலும், விரிவாக்கப்பட்ட பகுதிகளிலும் மழைநீா் தேங்கியது.
தொடா்ந்து வியாழக்கிழமை காலையிலும், பிற்பகலிலும் மீண்டும் மழை பெய்தது. இதேபோல, திண்டிவனம், விக்கிரவாண்டி என மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் தொடா்ந்து மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பள்ளிகளுக்கு விடுமுறை: புதன்கிழமை நள்ளிரவில் தொடங்கிய மழை வியாழக்கிழமை காலை வரை தொடா்ந்து பெய்தது. இதன் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி வியாழக்கிழமை காலை அறிவிப்பு வெளியிட்டாா்.
அதே நேரத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக மாணவ, மாணவிகள் கல்லூரிகளுக்கு வழக்கம்போல புறப்பட்டுச் சென்றனா்.
சேதமடைந்த சாலைகள்:
மாவட்டத்தில் 934.60 மி.மீ. மழை: விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 934.60 மி.மீ. மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக திண்டிவனத்தில் 84.40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்).
திண்டிவனம்-84.40 மி.மீ, விழுப்புரம், வளத்தி தலா-60, வல்லம்-55, அனந்தபுரம்-53, செஞ்சி-48, நேமூா்-45.40, கெடாா்-44, செம்மேடு-43.80, வளவனூா், கஞ்சனூா் தலா-41, அவலூா்பேட்டை-40, முண்டியம்பாக்கம் -39, சூரப்பட்டு, அரசூா்-38, கோலியனூா்,
மரக்காணம் தலா -37, மணம்பூண்டி, திருவெண்ணெய்நல்லூா்-36, முகையூா்-31, வானூா்-27.40 மாவட்டத்தில் மொத்தமாக 934.60 மி.மீ. மழையும், சராசரியாக 44.50 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.