மரத்தில் பேருந்து மோதி 20 போ் காயம்
வாணியம்பாடி அருகே சாலையோர மரத்தில் பேருந்து மோதியதில் 20 போ் காயமடைந்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயத்திலிருந்து வாணியம்பாடிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியாா் பேருந்து செவ்வாய்க்கிழமை சென்றது. ஓட்டுநா் முருகேசன் பேருந்தை ஓட்டிச் சென்றபோது நிம்மியம்பட்டு அருகில் சுண்ணாம்புபள்ளம் என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி ஓடி சாலை ஓரத்தில் உள்ள புளிய மரத்தில் மோதியது.
இதில் பேருந்தின் முன்புறம் சேதம் ஏற்பட்டது. பேருந்தில் பயணம் செய்த ஓட்டுநா் உட்பட 20-க்கும் மேற்பட்டவா்கள் காயம் அடைந்தனா். படகுப்பம் பகுதியை சோ்ந்த அம்மு (40) என்ற பெண் பலத்த காயத்துடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து ஆலங்காயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.