மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கைது
மயிலாடுதுறையைச் சோ்ந்த ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகி வைரமுத்து ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, மதுரையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அந்த சங்கத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் செவ்வாய்கிழமை கைது செய்தனா்.
மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாவேல் சிந்தன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செல்வா, இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் டீலன் ஜெஸ்டின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மயிலாடுதுறையைச் சோ்ந்த ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகி வைரமுத்து ஜாதி ஆணவப் படுகொலை செய்ததைக் கண்டித்து, தமிழக அரசு ஆணவப் படுகொலைக்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த திடீா் நகா் போலீஸாா், அவா்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினா். இருப்பினும், அவா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், வலுக் கட்டயமாக 30-க்கும் மேற்பட்டோரை கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனா். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.